சென்னை: ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே இந்த கூட்டம் செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் இந்த அமர்வு ரத்து செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினரிடையே மோதல் நடந்து வருகிறது. இதனிடையே, ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என பழனிசாமி தரப்பு அறிவித்தது. இந்தக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என தீர்ப்பளித்தார். அதன்படி, பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் நடந்தது. பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்யநாதன், சி.ஆர்யமா சுந்தரம், விஜய் நாராயண், வழக்கறிஞர்கள் எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், பி.எச்.அரவிந்த் பாண்டியன், ஸ்ரீராம், வழக்கறிஞர்கள் பி.ராஜலட்சுமி, சி.திருமாறன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்று பிறப்பித்துள்ள 127 பக்க விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றுமையாக செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சினைக்கு இடையே, ஜூன் 23-ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டும், அதில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஜூலை 11-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜூன் 23-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே அறிவித்துள்ளனர். இதனால், ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என அவர் கூற முடியாது.
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. எனவே, ஜூலை 11-ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்.
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான பொதுக்குழுவுக்குதான் முறையாக 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் வழங்க வேண்டும். சிறப்பு பொதுக்குழுவுக்கு இந்த விதி பொருந்தாது.
பொதுக்குழுவைக் கூட்ட கண்டிப்பாக அவைத் தலைவர் இருக்க வேண்டும். ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அவைத் தலைவர் அறிவித்ததும் சட்டவிரோதம் ஆகாது. இருவரது நிலைப்பாட்டினால் கட்சி செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 28-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது. இந்தச் சூழலில் அவரை இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.
அதிமுகவில் நிலவும் சூழல் பழனிசாமி தரப்புக்குத்தான் சாதகமாக உள்ளதேயன்றி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இல்லை. தனி நீதிபதியின் உத்தரவை பின்பற்றினால் அது அதிமுகவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி, கட்சியை முடக்கிவிடும்.
அதிமுகவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா, திருநாவுக்கரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதும் இப்படியொரு சூழல் நிலவியுள்ளது. தற்போது போட்டி பொதுக்குழு கூட்டப்படாததால் திருநாவுக்கரசு வழக்கின் உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது. இதற்காக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடும் நிலைக்கு தள்ள முடியாது.
ஜூன் 23 பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காத சூழலில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அதுதொடர்பாக பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும். ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஓபிஎஸ்:
அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வெளியானபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் மேல்முறையீடு செய்வோம். இறுதித் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும்” என்றார்.