தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் 2023 மார்ச்சுக்குள் முழுமை பெறும்: நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

நெல்லை: தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் வரும் அடுத்த ஆண்டு (2023) மார்ச்சுக்குள் முழுமையாக நிறைவு பெறும். அதற்கு முன்பாக வரும் அக்டோபர் மாதம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என நெல்லையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.பருவமழை காலங்களில் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்து வரும் வெள்ள நீரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடும் வகையில் தாமிபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம் ரூ.873 கோடியாக திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கால்வாய்க்கான பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

வெள்ளநீர் கால்வாய் பணிகளை அதிமுக ஆட்சிக் காலத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.  அப்போது அதிகாரிகள் எல்லாம் ‘துபாய்க்கு’ சென்று விட்டனர். அதிகாரிகள் சிலருக்கு மறந்து போன பணிகளை நினைவுபடுத்தவும், புதுமுகங்களாக உள்ள அதிகாரிகளுக்கு திட்டப் பணிகள் குறித்து தெரிவிக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தினோம். வெள்ளநீர் கால்வாயில் வரும் அக்டோபரில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முதற்கட்ட மற்றும் 2ம் கட்ட பணிகள் 100 சதவீதம் முடிந்து விட்டன. 3ம் கட்ட பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 4ம் கட்ட பணிகள் 48 சதவீதம் நிறைவேறியுள்ளன. வருகிற 2023 மார்ச் மாதம் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவு பெறும். பொன்னாக்குடியில் இத்திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையும் ஒரு காரணமாகும். பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் கால்வாய் தண்ணீரை கொண்டு செல்வதில் காலதாமதமாகி விட்டது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வு நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை எம்.பி., ஞானதிரவியம், கலெக்டர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.