திருமலை: திருப்பதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வருடாந்திர பிரமோற்சவம், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்தாண்டு வரும் 27ம் தேதி இந்த பிரமோற்சவம் தொடங்குகிறது. அன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை கோயில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் அருள்பாலிக்க உள்ளனர். பிரமோற்சவத்துக்காக ஏழுமலையான் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செப்டம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. 26ம் தேதி அங்குரார்பணம் சேனாதிபதி உற்சவர் வீதி உலா நடைபெறும்.
27ம் தேதி முதல் நாள் மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி கொடியேற்றமும், தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அக்டோபர் 5ம் தேதி 9ம் நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், கூட்டத்தை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டும் 9 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.