திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மதுரை – கொடைக்கானல் முக்கிய சாலையாகவும், திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ள சாலையில், நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்ற நிலையில், இந்தச் சாலை தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, சாலையை சீரமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ஒரு தள்ளு வண்டியில் செம்மண்ணை எடுத்து வந்து சாலையில் உள்ள பள்ளங்களில் கொட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் அந்த ஊழியர்களிடம், ஜல்லி தார் கலவை கொண்டு பேட்ச் ஒர்க் என்ற பணியை செய்யாமல் செம்மண்ணை கொட்டி விட்டு போகிறீர்களே என்று கேட்டதற்கு, அதிகாரிகள் ஜல்லி, தார் கொடுத்தால் அதைக் கொண்டு வந்து போடுவோம் எங்களிடம் இப்போது செம்மண்ணைத்தான் கொடுத்துவிட்டார்கள் என்று பதில் சொல்லிவிட்டு சென்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த மெத்தன போக்கான செயலால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்தனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை நல்ல முறையில் சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.