இடுக்கி: தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியிடம் (Leopard) தீரத்துடன் சண்டை போட்டு கொன்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மண்குளம் என்ற கிராமம் உள்ளது. சுற்றிலும் மலைகளும், வனங்களும் சூழ்ந்திருப்பதால் அடிக்கடி புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மண்குளம் கிராமத்துக்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்துவிட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகள், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் என 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அந்த சிறுத்தை புலி கொன்று தின்றுவிட்டது.
பொறியில் சிக்காத சிறுத்தை புலி
ஊருக்குள் சிறுத்தை புலி புகுந்ததை வனத்துறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர். இதன்பேரில், அதனை பிடிக்க ஊருக்குள் ஏராளமான பொறிகளை வனத்துறையினர் வைத்தனர். ஆனால் சிறுத்தை புலி பிடிப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்கு ஆடு – மாடுகளை விட வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்திருந்தனர். அதன்படியே, அந்த கிராமத்தினர் இரவில் நடமாடுவதை தவிர்த்து மாலை 6 மணிக்கே வீடுகளுக்கு சென்று வந்தனர்.
பாய்ந்து தாக்கியது
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிங்கனம்குடி காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் கோபாலன் (32), தனது அண்ணன் வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள நீரோடை அருகே பதுங்கி இருந்த சிறுத்தை புலி , கோபாலன் மீது பாய்ந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பின்புதான், தன் மீது பாய்ந்தது சிறுத்தை புலி என்பது கோபாலனுக்கு தெரிந்தது. கோபாலன் சுதாரித்து எழுவதற்கு முன்பாக, சிறுத்தை புலி அவர் மீது மீண்டும் பாய்ந்து அவரது இடது கையை கடித்து குதறியது.
கைகொடுத்த அரிவாள்
அப்போதுதான், மரக்கிளைகளை வெட்ட தான் சிறிய அரிவாள் வைத்திருந்தது கோபாலனின் நினைவுக்கு வந்தது. இதையடுத்து சிறிதும் தாமதிக்காமல் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்த கோபாலன், சிறுத்தை புலியை சரமாரியாக வெட்டினார். ஆனாலும் விடாத சிறுத்தை புலி, கோபாலனின் காலை கடித்து இழுத்துச் சென்றது. இதில் அவருக்கு காலில் இருந்து ரத்தம் கொட்டியது. இன்னும் சிறிது விட்டாலும், சிறுத்தை புலி தன்னை கொன்றுவிடும் என உணர்ந்த கோபாலன், அதன் தலையை குறிபார்த்து அரிவாளால் வெட்டினார். பலமான வெட்டு பட்டதால் சிறுத்தை புலி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனைத் தொடர்ந்து, ஊருக்குள் ரத்தம் சொட்ட சொட்ட சென்ற கோபாலனை அங்கிருந்தவர்கள் பார்த்து, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை புலி அரிய வகை வனவிலங்கு என்பதால் அதனை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால், கோபாலன் தற்காப்புக்காகவே சிறுத்தை புலியை கொன்றதால் அவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. சிறுத்தை புலியுடன் துணிச்சலாக சண்டையிட்டு அதை கொன்ற கோபாலனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.