நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகவே சுங்கச்சாவடி கட்டண உயர்வு: எல்.முருகன்

திருப்பூர்: ” இந்திய அரசியலமைப்பு சட்டம், ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. அந்த அதிகாரத்தின்படி, ஆளுநர்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநில அரசுக்கு இந்திய அரசியலமைப்பின்படி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை ஆளுநர் வழங்குகிறார்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தொழிலாளர் நகரமான திருப்பூரின் நலனைக் கொண்டு மத்திய அரசு 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்தப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வரும் மே 23-ம் தேதி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை வரும்போது, தொழிலாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தின் முதல்வர் அனைவருக்கும் சொந்தமானவர். திமுக தலைவராக அவர் எப்படி வேண்டுமானால் இருந்து கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதாததை பற்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், மற்ற பண்டிகளைகளுக்கு வாழ்த்துகளை பரிமாறுகிறார். தேர்தலுக்கு முன்பாக வெற்றிவேல் யாத்திரை எனது தலைமையில் நடந்தது. ஆனால், ஸ்டாலின் தேர்தல் பயத்தில் வேலை ஏந்தினார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக, ஒப்பந்தப்படி நடந்து கொண்டிருக்கிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு, 76-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு, ‘தியாகி திருப்பூர் குமரன் பெயர்’ வைத்தால் பொருத்தமானதாக இருக்கும்.

ராகுல் காந்தி இன்றைக்கு இந்தியாவில் யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ராகுல் காந்தி நடைபயணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

கரோனாவுக்கு பல்வேறு வளர்ந்த நாடுகளே, பொருளாதாரத்தில் திணறிக்கொண்டிருக்கும் போது, நம்முடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. மீன், ஜவுளி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமை அந்தந்த மாநில அரசுக்கு உண்டு. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. அதனை தடுக்க முன் வரவேண்டும். மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம், ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. அந்த அதிகாரத்தின்படி, ஆளுநர்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மாநில அரசுக்கு ஆலோசனைகளை சொல்கின்ற வேளையில், இந்திய அரசியலமைப்பின்படி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மாநில அரசுக்கு வழங்குகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.