நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். எங்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு, எங்களைப் போலவே ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் சம்பந்தம் முடித்தோம். மாப்பிள்ளை நல்ல குணம். மகள் சந்தோஷமாக இருக்கிறாள். இளைய பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, ஒரு பணக்கார வீட்டு சம்பந்தம் வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு பெண், ஒரு பையன் என இரண்டு பிள்ளைகள். பெண்ணுக்குத் திருமணமாகிவிட, பையனுக்கு எங்கள் இளைய மகளைக் கேட்டார்கள்.
எங்களைவிட பல மடங்கு வசதியான குடும்பம் அது. அதனால் நாங்கள் யோசித்தோம். ஆனால், ‘எங்களுக்கு உங்க குடும்பமும், பொண்ணும் ரொம்ப பிடிச்சிருச்சு. ஸ்டேட்டஸ் எல்லாம் நாங்க பார்க்கல. சீர், செய்முறைனு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உங்க பொண்ணை கொடுத்தா போதும்’ என்று மிகவும் தன்மையாகப் பேசினார்கள். எனவே நாங்களும் திருமணத்துக்கு சம்மதித்தோம்.
திருமணத்துக்குப் பின், அவர்கள் குணத்தில் மாற்றம் தெரிந்தது. சொல்லப்போனால், உண்மையான குணமே அப்போதுதான் தெரியவந்தது. மாப்பிள்ளை மிகவும் கோபக்காரர். எனவே, வசதியான வீட்டுப் பெண் என்றால் அவரை வேண்டாம் என்று சொல்லிச் செல்ல தயங்கமாட்டார், மிடில் க்ளாஸ் வீட்டுப் பெண் என்றால், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இருப்பார் என்றுதான் எங்களைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டபோது, உடைந்துபோனோம்.
மாப்பிள்ளையின் முட்டாள்தனமான, முரட்டு கோபத்தை எல்லாம் இப்போது பொறுத்துக்கொண்டு இருக்கிறாள் எங்கள் மகள். அது மட்டுமே பிரச்னை என்று இல்லாமல், மொத்த புகுந்த வீடுமே அவளுக்கு துயரமாகத்தான் இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வசிப்பதாலும், மாப்பிள்ளை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தாலும் மாமனாரின் தொழில் வருமானமே குடும்பத்துக்கு பெரிய வருவாய் என்பதாலும், மாமனார், மாமியார் ஆதிக்கம் வீட்டில் அதிகம். அதில் என் மகளின் உரிமையெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது. தினம் என்ன சமைக்க வேண்டும் என்பதில் இருந்து, வெளியே எங்காவது செல்ல வேண்டுமென்றால் மாமியாரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது வரை, எங்கள் மகளை ஓர் அடிமையாக வைத்திருக்கிறார்கள்.
மாமியார் சொல்லும் சமையலை சமைப்பதும், வெளியே செல்ல மாமியாரிடம் சொல்லிச் செல்வதும் அடிமைத்தனமா என்று தோன்றலாம். ஆனால், ‘உன் அம்மா வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான், ஒரு நாள் மட்டும் செல்ல வேண்டும்’, ‘எங்கள் பையன் செல்லமாக வளர்ந்தவன், அவன் என்ன செய்தாலும், கோபப்பட்டாலும், அடித்தாலும்கூட, நீதான் பொறுத்துப்போக வேண்டும், அதற்குத்தான் ஸ்டேட்டஸ் பார்க்காமல் உன்னைக் கல்யாணம் செய்திருக்கிறோம்’, ‘என்ஜினீயரிங் படித்திருந்தாலும் வேலைக்குப் போகக் கூடாது, இருக்கும் சொத்தே போதும், நீ வேலைக்குப் போக இங்கு எந்தத் தேவையும் இல்லை’, ’எங்கள் பையனுடன் சினிமா, ஷாப்பிங் என்று எல்லாம் ஊர் சுற்ற நினைக்கக் கூடாது. அது அவனுக்கும் பிடிக்காது’, ‘பொட்டு முதல் புடவை வரை என்ன வேண்டும் என்றாலும், எங்கள் மகனிடமோ எங்களிடமோதான் கேட்க வேண்டும், உன் கையில், உன் செலவுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது’, ‘திருமணமாகிச் சென்றிருக்கும் எங்கள் மகள், எப்போது எல்லாம் எங்கள் வீட்டுக்கு வருகிறாளோ, அப்போது எல்லாம் அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவளுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்’ – இப்படி நீண்டுகொண்டே போகின்றன அறிவுரைகள், வலியுறுத்தல்கள், கட்டளைகள்.
மொத்தத்தில், தங்கள் முரட்டு மகனுக்கு, பணக்கார குடும்பத்துக்கு ஓர் அடிமை எஜமானியை, மருமகள் என்ற பெயரில் வைத்துள்ளார்கள். ’மற்றதை எல்லாம் கூட விடுங்கள். என் கணவரே பிரச்னையாக இருக்கும்போது, இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து, இந்த வாழ்வில் என்ன மகிழ்ச்சி வரப்போகிறது எனக்கு? கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவரும் என்னை, தன் பணக்காரத்தனத்துக்கு பணிந்துபோக வேண்டிய மனைவியாகவே வைத்திருக்கிறார். அன்பு இல்லை, அதிகாரமே இருக்கிறது அவரிடம். எனக்கு எதற்கு இந்தக் கல்யாணத்தை செய்துவைத்தீர்கள்? என்னை நம் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் படித்த படிப்புக்கு வேலைபார்த்துக்கொண்டு, சுதந்திரமாக, சந்தோஷமாக இருக்கிறேன். இந்த தங்கக் கூண்டு எனக்கு வேண்டாம், மூச்சு முட்டுகிறது’ என்று கதறுகிறாள் மகள்.
எங்களுக்கும் மகள் சொல்வதே சரியெனப்படுகிறது. மிடில் க்ளாஸ் பெண்கள் என்றால் எல்லா அநியாயங்களையும் பொறுத்துப்போவார்கள் என்ற அவர்கள் எண்ணத்துக்கு பதிலடி கொடுக்கத் துடிக்கிறது, எங்கள் பெற்ற மனம். என்ன செய்வது நாங்கள்?