செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மயிலாடுதுறை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யபட்டு பணியமர்த்தப்படும் என அரசாணையில் குறிப்பிடபட்டுள்ளதாகவும், அதற்கான தகுதிகள் பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 2 வருடங்கள் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் அரசானை வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியானது தற்காலிக பணியாக அமர்த்தபட்டு, பின்னர் நிரந்தரபடுத்தபடுவார்கள் என்றும் இதுபோன்ற தற்காலிக பணி நியமனத்தை டிஎன்பிஎஸ்பி மூலம் பணியமர்த்த முடியாது. எனவே உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனத்தை உரிய கல்வி தகுதியின் அடிப்படிப்படையில் நேரடி நியமனமாக நியமிக்கவும், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தற்காலிக பணிக்கென குறிப்பிட்ட பட்டபடிப்பு அவசியமில்லை எனவும் மேலும் தற்காலிக பணி நியமனத்தை டி.என்.பி.எஸ்.சி.மூலம் நியமிக்க முடியாது என்பதால் இந்த அரசாணைக்கு இடைகால தடைவிதிக்க வேண்டும் என வாதிடபட்டது.
இதனை தொடர்ந்து உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடைவித்து உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.