இன்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் மேடையில் உரையாற்றினார். அப்பொழுது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது குறித்து அவர் பேசிய போது, “நிறைய குழந்தைகளின் பெயர்களுக்கு அர்த்தமே தெரிவதில்லை.
பல பெற்றோர்கள் ஆர்வத்தில் என்னிடம் வந்து குழந்தைகளை கட்டாயமாக கொடுத்து தமிழ் பெயரை குழந்தைக்கு சூட்டுங்கள் என்று கோரிக்கை வைப்பார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று நானும், குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டி விடுவேன். ஆனால், சில காலம் கழித்து அந்த குழந்தை வளர்ந்த பின்னர், அதனிடம் பெயர் கேட்டால் அது வேறு பெயரை கூறுகிறது.
கூட்டத்தில் அடித்துப் பிடித்து குழந்தைகளை கொண்டு வந்து திணித்து பெயர் வைத்தே ஆக வேண்டும் என்று அன்போடு கோரிக்கையை வைக்கும் பொழுது, வேறு வழியே இல்லாமல் அவர்களது மன ஆறுதலுக்காக தமிழ் பெயரை வைப்பேன். ஆனால், பின்னர் சான்றிதழில் அவர்கள் வேறு பெயரை கொடுத்து விடுகின்றனர்.
இதன் காரணமாக எனக்கு குழந்தைக்கு பெயர் சூட்டுகின்ற ஆர்வமே இப்போது எல்லாம் இருப்பதில்லை. நான் வைக்கும் பெயர் உங்களுக்கு பிடிப்பதில்லை. அப்புறம் ஏன் என்னை கட்டாயப்படுத்தி பெயர் வைக்க சொல்லி எனது நேரத்தை வீணடிக்கிறீர்கள்.” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.