பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் எதிரேவரும் வாகனம் தெரியாமல் கடும் அவதிப்பட்டனர். விபத்தைத் தவிர்த்திட முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மிகக்கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஓருரி நாட்களே கனமழை பெய்தது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் மழைக்காக விடுமுறை அளிக்கும் சூழலில் பெரம்பலூர் மாவட்டத்தின் புகை சூழ்ந்ததுபோல பனி மூட்டமாகக் காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, மேட்டுப்பாளையம், நெய்குப்பை, வி. களத்தூர், சின்னாறு, எறையூர், குன்னம் தாலுகா, திருமாந்துறை, நோவாநகர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களிலும் மற்றும் அதனை ஒட்டிய திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவியது. இந்தக் கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
வாகனங்கள் முன்னே, பின்னே செல்வதை அறியமுடியாததால் விபத்துகள் நேராதிருக்க தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர். கடும் பனிமூட்டம் காரணமாக எதிரேவரும் வாகனங்கள் தெரியாதால் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்றன. இந்த பனிமூட்டம் காலை 8 மணிவரை நீடித்தது.
பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தும் மழை பொழியாமல் இருக்கும்போது தான் இதுபோன்ற பனிமூட்டம் காணப்படும் என்கின்ற நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையிலும் நேற்று காலை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்குகடும் பனி மூட்டம் நிலவியது வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.