கொல்கத்தா: சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பொய் செய்திகள் குறித்து 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொய் செய்திகள்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொய் செய்திகள் பெரும் சவாலை ஊடகங்களுக்கும், அரசுக்கும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக கலவரங்களும் ஏற்படுகின்றன. எனவே இதனை களையெடுக்க காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பொய் செய்திகள் பரப்பியதாக மேற்கு வங்க மாநிலத்தில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்
கடந்த ஆண்டு இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் பிரசார பணியில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. பாஜகவுக்கும் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம் சாட்டின. இந்நிலையில், அதிகமாக பொய் செய்திகள் பரப்பப்படுவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இந்த புகார்களையடுத்து மாநிலம் முழுவதும் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக வழக்குகள்
இது கடந்த 2021ம் ஆண்டு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 4ல் ஒரு பங்காகும். கொல்கத்தாவில் மட்டும் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் 34 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு நாடு முழுவதும் 179 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பொய் செய்திகள் குறித்து ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைத் தலைவர் பேராசிரியர் சட்டோபாத்யாய் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓருங்கிணைந்த முயற்சி
அதில், “இது கவலைக்குரிய விஷயம் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியல் பிரசாரங்கள் மக்களைச் சென்றடைய நெறிமுறையற்ற வழிமுறைகளை மேற்கொள்கின்றன.” என்று கூறியுள்ளார். மேலும், “இது ஒரு அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க நெறிமுறை கட்டமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 24 சதவிகிதமாகும். நாட்டிலுள்ள 19 மெட்ரோ நகரங்களில் பதிவுசெய்யப்பட்ட பொய் செய்திகள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கையில் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 60 சதவிகிதமாகும். கொல்கத்தாவைத் தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் தலா எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் பொய் செய்திகள் தொடர்ந்து அதிகரித்தாலும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சிக்கு பின்னர் இந்த பொய் செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.