பொய் செய்தி வழக்குகள் பதிவு; மேற்கு வங்கத்துக்கு முதலிடம்| Dinamalar

கோல்கட்டா : சமூக வலைதளங்களில் வெளியான பொய் செய்திகள் தொடர்பாக, நாட்டிலேயே மிக அதிகமாக மேற்கு வங்கத்தில், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியது. இத்தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் அதிகமான செய்திகள் வெளியிடப்பட்டன. இதில், நிறைய பொய் செய்திகள் வெளியானதாக புகார்கள் அளிக்கப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.நாட்டிலேயே மிக அதிகமாக மேற்கு வங்கத்தில் தான், பொய் செய்தி வெளியிட்டதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் பொய் செய்தி வெளியிட்டதாக 34 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுதும் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, ஜாதவ்பூர் பல்கலை ஊடகத் துறை பேராசிரியர் சடோபாத்யாயா கூறியதாவது:சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியாவது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.

ஆனால், எனக்கு இது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதற்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண்பது ஒரு பக்கம் இருந்தாலும், தார்மீக அடிப்படையிலும் இதை அணுக வேண்டும். பொய் செய்திகள் வெளியாவதை தடுக்க, தார்மீக அடிப்படையில் ஒரு திட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.பொய் செய்திகளை மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.