கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.
தோகைமலை அருகேயுள்ள பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மருதை(59). இவர் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாகத் திட்டியதாகவும், தவறான நோக்கத்துடன் தொட்டதாகவும் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பள்ளித் தலைமை ஆசிரியை மேரிலாரா புகார் அளித்தார்.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் மருதையை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, ஆசிரியர் மருதை மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், தங்கள் பெற்றோருடன் பள்ளிமுன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர், மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் அங்கு சென்று, மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி, வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, பெற்றோர் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.