தெலுங்கானாவில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இங்கில்லை என கலெக்டரிடம் கேட்ட சம்பவம் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பிற்குர் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் நேற்றைய தினம் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் பாட்டீலிடம், ” ஏன் இங்கு பிரதமர் மோடியின் படம் இல்லை” என காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச அரிசியை மத்திய அரசு வழங்கி வருவதால் தெலுங்கானாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் படம் இருக்க வேண்டும். இலவச அரிசி ஏழைகளுக்குச் சென்றடைவதைக் காண படங்கள் அவசியம் என கூறி கலெக்டரை பார்த்து முகம் சுளித்தார்.
இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அமைச்சர் ராமா ராவ், “காமரெட்டி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் கலெக்டருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அநாகரீகமான நடத்தையால் நான் திகைக்கிறேன். இந்த அரசியல் வரலாற்றுவாதிகள் கடின உழைப்பாளிகளான ஐஏஎஸ் அதிகாரிகளை தெருவில் வைத்து மனச்சோர்வடையச் செய்வார்கள். “கலெக்டர் ஜிதேஷ் வி பாட்டீலின் கண்ணியமான நடத்தைக்கு எனது பாராட்டுகள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு!
இந்நிலையில், நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ரேசன் கடையில் ஆய்வுக்குச் சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என கலெக்டரிடம் கேட்ட நிலையில் இன்று, டிஆர்எஸ் கட்சியினர் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.