கோவை: கோவை மாநகரில் ப்ராங்க் வீடியோ தயாரிப்பு என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடம் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து, ப்ராங்க் வீடியோஸ் (குறும்புத்தனமான வீடியோக்கள்) என்ற பெயரில் தங்களது யூடியூப் சேனலில் வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
ப்ராங்க் வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறையாக செய்து யூடியூப் சேனலில் வெளியிட்டு வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறு ப்ராங்க் வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள், அமைதியான சூழலை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்களுக்கும், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்களுக்கும், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு செல்பவர்களுக்கும் மிகுந்த தாக்கத்தையும், திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. சில வீடியோக்களில் நடிப்பவர்கள், பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையிலும் வரம்பு மீறிய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியும், மனரீதியான திகைப்பும் ஏற்படுகிறது.
தனிமனித சுதந்திரம்: பின்னர் ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் அது குறித்து பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்கின்றனர். ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்களின் செயல்கள் பொதுமக்களிடம் விரும்பத்தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்கள், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும், அவருக்கு தெரியாமலும் யூடியூப் சேனல்களில் வெளியிடப்படுவதால், அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகி்றது. ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்களின் இச்செயலானது அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது.
கோவை மாநகரிலும் சமீபகாலமாக ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், ப்ராங்க் வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கோவை மாநகரில் யாரேனும் ப்ராங்க் வீடியோ எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அதுபற்றி புகார் வரப்பெற்றாலோ சம்பந்தப்பட்ட ப்ராங்க் வீடியோக்கள் எடுக்கும் நபர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற சிறப்புச் சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வீடியோ சேனல் முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.