பெங்களூரு: கர்நாடக முருக மடத்தின் தலைவர் பாலியல் புகாரில் சிக்கியத்தை அடுத்து மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத், அந்த மடம் வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி தருவதாக அறிவித்துள்ளார். ராமன் மகசேசே விருது பெற்ற பி.சாய்நாதருக்கு கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் உள்ள முருகமடம் கடந்த 2017ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் மற்றும் விருது பலகை அடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் சித்திரதுர்கா முருக மடத்தில் மடாதிபதியாக இருந்த சிவமூர்த்தி முருகா, சரவணன் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக சாய்நாத் அவரது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருகா சரவணன் குறித்து ஊடகங்களில் வெளியான குற்றசாட்டுகளால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே விருதுடன், ரூ.5 லட்சம் காசோலை மூலமாக திருப்பித் தருவதாகவும், இந்த வழக்கை கர்நாடக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்த சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மைசூருவை சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘OdaNadi’ முயற்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.