மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பதே, அற்புதமான அனுபவம். கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும். மழைக்காலம் இயற்கையின் அழகுக்கு மெருகேற்றும்.
கர்நாடகாவில் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலா தலங்கள் ஏராளம். மலைகள், நீர் வீழ்ச்சிகள், கடற்கரைகள் சூழ்ந்த மாநிலம். மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சிகளில், பேரிறைச்சலுடன் தண்ணீர் கீழே பாய்ந்து வருவதை கண்டு ரசிப்பது, பேரானந்தமாக இருக்கும். கண்களுக்கு விருந்தளிக்கும். இத்தகைய நீர் வீழ்ச்சிகள் பல உள்ளன.
மகிழ்ச்சியான தருணம்
மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், ஜோக் நீர் வீழ்ச்சி ஒன்றாகும். இந்த நீர் வீழ்ச்சி, ஷிவமொகாவின், சாகராவில் உள்ளது. இங்கு சராவதி ஆறு, 810 அடி உயரத்திலிருந்து பாய்கிறது. இந்த ஆறு, நான்காக பிரிந்து ‘ராஜா, ராணி, ரோரர், ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது. ஜோக் நீர் வீழ்ச்சி மிகவும் அழகானது. லட்சக்கணக்கான சுற்றுலா பயணியரை, தன் வசம் ஈர்க்கிறது.சாம்ராஜ் நகரில் காவிரி நீர்ப்பாசன பகுதியில் தொடர் மழை பெய்கிறது. கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளிலிருந்து, பெருமளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சுற்றுலா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.சாம்ராஜ்நகர், கொள்ளேகாலின் பரசுக்கி, மாண்டியா, மளவள்ளியின் ககனசுக்கி நீர் வீழ்ச்சிகளில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரிலிருந்து, 167 கி.மீ., தொலைவில் இந்த நீர் வீழ்ச்சிகள் உள்ளன.
மைசூரு ரயில் நிலையத்திலிருந்து, 60 கி.மீ., துாரத்தில் பாய்வது சிவ சமுத்ரா நீர் வீழ்ச்சி. ககனசுக்கி, பரசுக்கி என இரண்டு நீர் வீழ்ச்சிகளும், சிவசமுத்ரா நீர் வீழ்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.மழைக்காலம் துவங்கினால், குடகின் நீர் வீழ்ச்சிகள் களை கட்டும். இங்கு 10 க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உள்ளன. ‘அப்பி’, ‘இர்பு’, ‘சேலவாரா’ என, மற்ற நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அபாயம் உறுதி
குடகின் மிகவும் ஆழமான நீர் வீழ்ச்சிகளில், சோம்வார்பேட்டின் மலள்ளி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். இது பார்க்க மிகவும் அழகாக தோன்றும். இதன் கீழுள்ள ஆழம், யாருக்கும் தெரியாது. விளையாட நீரில் இறங்கினால், அபாயம் உறுதி.
மாவட்டத்தின் மலை, குன்றுகளின் அழகு, பனி படர்ந்த சூழ்நிலை, மழைக்காலத்தில் தென்படும் நீர் வீழ்ச்சிகளை காணவே, உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து, சுற்றுலா பயணியர் குவிகின்றனர். ‘அபாய இடம்’ என்ற எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தும், பலர் அதை அலட்சியப்படுத்தி, அபாயத்தில் சிக்குகின்றனர்.
உத்தரகன்னடா, நீர் வீழ்ச்சிகளின் சொர்க்கம். இதனை ‘நீர் வீழ்ச்சிகளின் மாவட்டம்’ என்றே அழைக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதிகளில் நீர் வீழ்ச்சியை காணலாம். உயரமான மலைப்பகுதியிலிருந்து, பூமியை நோக்கி பாய்கிறது. அதன்பின் வளைந்து, நெளிந்து ஆற்றில் கலப்பதை பார்ப்பதே, தனி அழகு. இது போன்ற நீர் வீழ்ச்சிகளில், சாத்தோடியும் ஒன்றாகும்.அடர்த்தியான வனம், பச்சை பசேலென்ற சூழல், பறவைகளின் ரீங்காரம், பாறைகளின் நடுவில் பாம்பை போன்று பாய்ந்து வருகிறது நீர் வீழ்ச்சி சாத்தோடி. ஆண்டு முழுதும் தண்ணீர் பாயும். மழைக்காலத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற கர்வத்துடன் பாய்வதை காணலாம்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்