மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான 20 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சேதமானது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காலையில் துவங்கி இரவு வரை மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, புத்தகரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் வழக்கமான பரப்பளவை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமானது. மயிலாடுதுறை அருகே திருவாளபுத்தூர் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து தண்ணீரில் மிதப்பதால் நெல்மணிகள் முளைத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் போது, நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும். இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது. தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.