திருநெல்வேலி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களது பதவி பறிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 13 கடற்கரை கிராமங்களுக்கு, ரூ.25 கோடி மதிப்பில் பொன்னன்குறிச்சி தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதனால், இதற்கு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கான அரியநாயகபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, புதிய திட்டம்தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம்விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்களை புற ஆதார அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ரூ.983 கோடியில்..
சென்னையில் ரூ.983 கோடியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள்ரூ.84 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.