முதலாவது விமானம்தாங்கி கப்பலையும் இந்திய கடற்படைக்கான புதிய கொடியினையும் அறிமுகம்செய்த இந்தியா

2022 செப்டம்பர் 02ஆம் திகதி கொச்சியில், இந்தியாவினால் உள்நாட்டில் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை சேவையில் இணைக்கும் நிகழ்வுகள் நடைபெற்ற அதேசமயம் இந்திய கடற்படைக்கான புதிய கொடியும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்துக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வரலாற்றுரீதியான பிணைப்பினை குறிப்பிடும் வகையில் அக்கொடியின் மையப்பகுதியில் இதுவரைகாலமும் இருந்துவந்த புனித ஜோர்ஜ் சிலுவை நீக்கப்பட்டு இந்த புதிய கடற்படை கொடி வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய கடற்படையின் கொடியில் 1950இல் முதலாவது மாற்றம்  மேற்கொள்ளப்பட்டதுடன்   அச்சந்தர்ப்பத்தில் இடது மேல் மூலையில் இந்திய மூவர்ணக் கொடி சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2. இந்திய கடற்படையின் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பலான விக்ரமாதித்யா 2016 ஜனவரியில் கொழும்புக்கு வருகை தந்ததுடன் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் பிணைப்பினை அது மேலும் வலுவாக்கி மக்களிடையில் பாரிய ஆர்வத்தையும் தோற்றுவித்திருந்தமை நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இலங்கையுடனான ஒத்துழைப்பினை தொடரும் வகையில் 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று அதாவது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கை விமானப்படைக்கு டோனியர் கடல் கண்காணிப்பு விமானம் பரிசளிக்கப்பட்டமை மற்றொரு சிறப்பம்சமாகும். பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் பெருமுயற்சிகளுக்கு இந்த டோனியர் விமானம் மேலும் வலுவூட்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3.     முதன்முதலாக உள்நாட்டில் கட்டப்பட்ட 45,000 தொன் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை உருவாக்கியுள்ளமை மூலம் பல்வேறு முனைகளிலும் செயற்படும் திறன்கொண்டதும் நவீன வசதிகளைக் கொண்டதுமான  விமானந்தாக்கி கப்பலை வடிவமைத்து அதனை உருவாக்கி  இயக்குவதற்கான தனது அதிசிறந்த ஆற்றலை இந்தியா ஆணித்தரமாக வெளிக்காட்டியுள்ளது. இக்கப்பல் 262 மீற்றர் நீளம் கொண்டதுடன் 28 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் விமானம் (LCA) மற்றும் நவீன இலகுரக ஹெலிகாப்டர் (ALH) ஆகியவை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தரித்து நிற்கும் வசதிகள் காணப்படுகின்றன.

4.     2022 மார்ச்சில் இந்திய கடற்படை கப்பலான தரங்கனியில், கப்பலில் விமானங்களை தரையிறக்கும் பயிற்சிகள் மற்றும் நவீன இலகு ரக கப்பலுக்குரிய துணைவிமானிக்கான  பல்வேறு பயிற்சிகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்காக ஒழுங்கமைப்பதில் இந்திய கடற்படையானது அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தது. மேலும் பிராந்தியத்தில் பாதுகாப்பினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டும் அதிசிறந்த இயங்கு திறனை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்திய அரசின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் SLNS சாகரா, SLCG சுரக்‌ஷா மற்றும் AN 32 ஆகியவற்றுக்கான உதிரிப்பாகங்கள் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5.     கொவிட் 19ஐ எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக 100 தொன்கள் திரவநிலை மருத்துவ ஒட்சிசனுடன் 2021 ஆகஸ்ட் 22ஆம் திகதி இந்திய கடற்படைக்கப்பலான ஐ.என்.எஸ். சக்தி விசாகபட்டினத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்தது. அத்துடன் 2022 ஏப்ரல் மற்றும் ஜூனில் இலங்கைக்கு துரிதமாக மருத்துவ பொருட்களை விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் விசேட சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். விசேட தேவையுடைய படையினருக்கான இந்திய அரச சார்பற்ற நிறுவனமான பகவான் மஹாவீர் விக்லங் ஷகயக சமிதி அமைப்பினால் 2022 பெப்ரவரி மார்ச் மாதங்களில் இலங்கை ஆயுதப் படைகளைச்சேர்ந்த விசேட தேவையுடையோரிற்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் முகாம் ஒன்று இந்திய அரசின் அனுசரணையுடன் இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் முகமாக நடத்தப்பட்டது.

6.     இலங்கை ஆயுதப் படைகளின் திறன் மற்றும் ஆளுமை ஆகியவற்றினை மேம்படுத்தும் முகமாக 4000 தொன் மிதவை இறங்குதுறை மற்றும் இலங்கை கடற்படைக்கான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் உருவாக்கல் ஆகியவற்றுக்கான உடன்படிக்கைகள் மார்ச் 2022இல் கைச்சாத்திடப்பட்டிருந்தன. பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற நோக்கினை எட்டுவதற்கு இந்திய அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பு ஆதரவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
02 செப்டெம்பர் 2
022  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.