சமீபத்திய கே.பாக்யராஜ் – ஓ.பி.எஸ் சந்திப்பு அ.தி.மு.க தொண்டர்களை உற்றுப்பார்க்க வைத்தது. “எம்.ஜி.ஆருடனும் அ.தி.மு.க-வுடனும் நெருக்கமாக இருந்த என்னால், அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஒரு கஷ்டம் வந்தால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என இருதரப்புக்கும் தூதுவராகச் சென்றது குறித்து தனது முந்தைய பேட்டியில் தெரிவித்திருந்தார் கே.பாக்யராஜ். அவரிடம் கேட்பதற்கும் பேசுவதற்கும் இன்னமும் நிறைய இருக்கின்றன. அந்தப் பேட்டியின் தொடர்ச்சி இதோ…
50 ஆண்டுக்கால அ.தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“புரட்சித் தலைவர் அ.தி.மு.க-வைத் தொலைநோக்குப் பார்வையுடன் ஆரம்பித்தார். கடைசிவரை முதல்வராகத்தான் இருந்தார். அவருக்குப்பிறகு, போராட்டங்களுக்கிடையேதான் ஜெயலலிதாவால் உள்ளே வரமுடிந்தது. அவருக்கும் ‘புரட்சித் தலைவி’ பட்டம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. அவர் மறைந்தபோது ‘இந்த அரசு தாங்காது’ என்றார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சி நடந்துகொண்டுதானே இருந்தது. பேலன்ஸ் பண்ணி ஆட்சியை நடத்தினார்கள். புரட்சித் தலைவர் போட்ட பேஸ்மண்ட் அப்படியானது. அதனால், அவருக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அதையே தொண்டர்களுக்கும் கொடுக்கவேண்டும். அவர்களால்தான், 50 வருடங்கள் நிலைத்திருக்க முடிகிறது. அதனால், ஓ.பி.எஸ்ஸும் இபிஎஸ்ஸும் ஒற்றுமையாக இருந்தால் மக்களிடம் நற்பெயர் கிடைக்கும். அ.தி.மு.க மீண்டும் எழுச்சி பெறவேண்டும்”.
ஒற்றைத் தலைமைக்கு யார் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?
“தலைவர் இறந்தபோதும் கோஷ்டிப் பூசல் உருவானது. ‘இறந்து ஒருவாரம்கூட ஆகல. அதற்குள்ளாகவா? கொஞ்ச நாள் கழிச்சு பொதுக்குழுவைக் கூட்டி யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யலாம். அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கும்’ என்றேன். இப்போதும், அதுபோல்தான் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. என்ன இருந்தாலும் தொண்டர்கள் முடிவுக்குத் தலைமை கட்டுப்படவேண்டும். யாரையும் ஒதுக்காமல் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். அதில், நியாயம் கேட்கலாம். தொண்டர்கள் முடிவு செய்யட்டும்”.
முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், அண்ணாமலை, ரஜினி, பிரதமர் மோடி, சாந்தனு, உதயநிதி குறித்து?
“முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகப்பெரிய பொறுமைசாலி. அவரைப் பல வருடங்களாக வருவார், வரப்போகிறார் என்றார்கள். ஆனால், அவரோ வரும்போது வருவது வந்தே தீரும் என்று தீர்க்கமாகக் கவலைப்படாமல் இருந்தார். பதவி ஏற்கும்போது, அவரது மனைவி கண்ணீர் விட்டதைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் உணர்வுகளும் போராட்டங்களும் அவரது மனைவிக்குத் தெரியும். அதன் வெளிப்பாடுதான் அந்தக் கண்ணீர். ஸ்டாலினை நான் நெருக்கமாகவும் பார்த்துள்ளேன். தூரமாகவும் இருந்து பார்த்துள்ளேன். அவரின் பொறுமைக்காக அவரைப் பாராட்டவேண்டும்.
கமல்ஹாசன் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார். வெற்றியை மட்டுமே தொடர்ந்து சுவைக்கவில்லை. இம்முறை அவருக்கு லோகேஷ் கனகராஜ் மாதிரி நல்ல டீம் அமைந்தது. ஸ்கோர் செய்தார். அவரது உண்மையான உழைப்புக்கு எப்போதும் பாராட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அண்ணாமலை குறித்து பெரிதாகச் சொல்லத்தெரியவில்லை. கர்நாடகாவில் நல்ல பெயர் எடுத்தவர். இங்கு வந்தபிறகு அவரைப் பற்றி பேப்பரில் வந்துகொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் வாய்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியாது. ஆனால், அவருக்குத் திறமை அங்கீகாரம் கிடைத்துத்தான் இங்கு வந்துள்ளார் என்பது தெரியும்.
நாம் சாதாரணமாக ஒரு பயணம் செய்துவிட்டு வந்தால் களைத்துவிடுவோம். ஆனால், பிரதமர் மோடி நாடு நாடாகச் செல்கிறார். எப்படி அவரால் முடிகிறது. உடம்பை ஆரோக்கியமுடன் வைத்துள்ளார். அதனால்தான், தொடர்ந்து பயணிக்க முடிகிறது.
ரஜினி ஒரு போராளி. சினிமாவுக்கு வரவேண்டும் என்று நினைத்தார். அதேமாதிரி வந்து சாதித்தார். வந்தபிறகு தக்கவைப்பது பெரிய விஷயம். தக்க வைத்ததில் ரொம்ப கவனம் செலுத்தியவர். அதேபோல, ‘நான் வந்துட்டேன்’ என்று தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதர்.
சாந்தனுவிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால், நல்ல வாய்ப்பு வரும்போதுதான் ஆற்றல் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
உதயநிதியை இன்னும் சினிமா நடிகராகத்தான் பார்க்கிறேன். அவரது அப்பாவைக் கூர்ந்து பார்த்த அளவுக்கு, உதயநிதியை அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. இனிமேல்தான் அரசியலில் கூர்ந்து பார்க்கவேண்டும். அவரிடமும் நல்ல கதைகள் செய்யவேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது”.
கே.பாக்யராஜின் இந்தக் கருத்துகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.