நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (02.09.2022) நடைபெற்றது.
கூட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டப்பணிகளுக்கான நிதிகள் மற்றும் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையர்களிடம் கேட்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்த ஓராண்டுக்குள் கவனத்தில் எடுத்து செய்வதற்காக திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் வழங்கல் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கேட்டுள்ளனர். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமென்று எதுவும் இல்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களின் தேவையறிந்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையானவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். அரசின் கவனத்தை திருப்பி கூடுதல் நிதி பெறவேண்டும் என்பதற்காகவே ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டம் எனச்சொல்கின்றனர்.
உண்மையில் ராமநாதபுரம் போல பணக்கார மாவட்டம் எதுவும் இல்லை. மத்திய அரசு அறிவித்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடே இன்னும் தரவில்லை. எனவே திட்டத்திற்கான நிதிகளை கேட்டுத்தான் வாங்கவேண்டும். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக திகழும் இடங்களில் கள ஆய்வு நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல ஒவ்வொரு நகராட்சியிலும் பணியாட்களை தேவையை பொறுத்து அவர்களே ஆட்களை நியமித்துக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நிதியும் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது” என்றார். விருதுநகர் நகராட்சியில் பல வருடங்களாக கிடப்பில் உள்ள பாதாளச்சாக்கடைத் திட்டம் குறித்து கேட்டதற்கு, பதிலளிக்காமல் எழுந்து சென்றார்.