உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கோயில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று கோயிலின் மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
இறுதியாக ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவில் கடந்த ஒரு மாதத்தில் பெறப்பட்ட காணிக்கைகளின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், உண்டியல் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 11 லட்சத்து 53ஆயிரத்து 571 ரூபாய் பணமும், 75 கிராம் 400 மில்லிகிராம் தங்கம், 2 கிலோ 250 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.