வரம்பு மீறும் Prank Video யூட்யூபர்ஸ் – சேனல் முடக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை

கோவையில் குறும்புத்தனமான வீடியோ எடுத்தல் (ப்ராங்க் வீடியோ – Prank Video) என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின் கீழும் வழக்குபதிவு செய்யப்படும் என மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகர் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து, குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் (Prank Videos) தங்களுக்கென்று யூ-டியூப் சேனல் வைத்துக் கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்களிடையேயும், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்கள் இடையேயும், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இடையேயும் மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.
image
சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வண்ணம் எதிர்பாலினத்தாரை எதேச்சையாக நடப்பதுபோல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கிறார்கள். திடீரென்று நிகழும் மேற்படி வரம்புமீறிய செயல்களானது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியையும், மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது. பின்னர் ப்ராங்க் வீடியோ (Prank Video)எடுப்பவர்கள் அதுகுறித்து தெரிவித்து சமாதானம் செய்கின்றனர்.
இருப்பினும் இச்செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களிடையே, விரும்பத்தகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இவ்வாறு எடுக்கப்பட்ட ப்ராங்க் வீடியோ (Prank Video)-க்கள் யூ-டியூப் சேனல்களில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும், அவருக்கு தெரியாமலும் வெளியிடப்படுவதால் அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுகிறது. குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் இச்செயலானது, அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.
image
கோவை மாநகரிலும், சமீப காலமாக ப்ராங்க் வீடியோ (Prank Video) என்ற பெயரில் பந்தய சாலை போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தியும், புகாரும் எழுந்துவருகிறது. எனவே, கோவை மாநகரில் எவரேனும் ப்ராங்க் வீடியோ (Prank Video) எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார் வரப்பட்டாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்(கள்) மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன் அவரது வீடியோ சேனலும் முடக்கப்படும்.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.