கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி, உறவினர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தனர்.
இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்டகால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி, குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த விழா பொதுவாக குழந்தைபிறந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடத்தப்படுகிறது. காதணிவிழா ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், மக்கள் இந்த சடங்கை ஒரு நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தில்தான் செய்யவார்கள்.
காதுகுத்து
அவரவர் சடங்குபடி, அதற்குரிய திதி, நட்சத்திரம், லக்னப்படி நடைபெறும். மேலும் காதணி விழா நடத்துவதற்கான நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்து கொடுப்பார்கள். அன்றைய தினம் குலசாமிக்கு படையல் போட்டு விழாவை சிறப்புற நடத்துவார்கள். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
50 வயது நபர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா என்ற மனைவியும், வேடியப்பன், மணி என்ற இரு மகன்களும் உள்ளனர். ஏழுமலை சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. தனது சிறு வயது நீண்ட நாள் ஆசையை, தனது பிள்ளை மற்றும் உறவினர்களிடம் ஏழுமலை கூறியுள்ளார்.
தாய்மாமன் மடியில்..
இதையடுத்து ஏழுமலையின் சிறுவயது ஆசையை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக குலதெய்வ கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்று, சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்துவதைப் போல செய்தனர். அதன்படி, 50 வயதான ஏழுமலைக்கு மொட்டை அடித்து, தாய்மாமன் மடியில் அமர வைத்து காது குத்தி மகிழ்ந்தனர்.
உறவினர்கள் நெகிழ்ச்சி
குலதெய்வ கோயிலில் நடந்த இந்நிகழ்வில், ஏழுமலையின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தடபுடாலாக அசைவ விருந்து அளிக்கப்பட்டது. 5 வயதில் நிறைவேறாத தனது ஆசையை, 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் நிறைவேறியதால் ஏழுமலை எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். சிறு வயதில் நிறைவேற்ற வேண்டியதை, 50 வயதில் மொட்டை அடித்து, காது குத்தி நடத்தப்பட்ட இந்த விநோத நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.