பாட்னா: விதிமுறைகளை மீறி விமான கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற 2 பாஜக எம்பிக்கள் உட்பட 9 பேர் மீது ஜார்கண்ட் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் விமானம் நிலையத்திற்கு பாஜக எம்பி மனோஜ் திவாரி, எம்பி நிஷிகாந்த் துபே, அவரது இரண்டு மகன்கள் ஆகியோர் வந்தனர். அவர்கள் விமானத்திற்கு செல்லும் வழியாக உள்ளே சென்றனர். பின்னர் விமானத்தின் கேட் மூடப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவர்கள் விமானத்திற்கு செல்லும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை வழியாக சென்றனர். விதிமுறை மீறி கட்டுப்பாட்டு அறைக்குள் வந்ததாக தியோகர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பொறுப்பாளர் டிஎஸ்பி சுமன் அனன், மேற்கண்ட நபர்கள் மேல் போலீசில் புகார் அளித்தார்.
அதையடுத்து பாஜக எம்பி மனோஜ் திவாரி, எம்பி நிஷிகாந்த் துபே, அவரது இரண்டு மகன்கள் மற்றும் தியோகர் விமான நிலைய இயக்குநர் உட்பட 9 பேர் மீது ஜார்க்கண்ட் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எம்பி நிஷிகாந்த் துபே ெவளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒன்றிய அரசின் விதிகளின்படி தியோகர் விமான நிலையத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளேன். கடந்த 31ம் தேதி டெல்லி விமானத்தை பிடிப்பதற்காக தியோகர் விமான நிலையத்திற்கு வந்தோம். அந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் வசதி இல்லாததால், கட்டுப்பாட்டு அறை வழியாக செல்ல முயன்றோம். எனது பணியை தடுத்தற்காக டெல்லி காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜார்கண்ட் போலீஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.