வில்லியனூர் மூர்த்தி குளத்தை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வில்லியனூர் : வில்லியனூர் மூர்த்தி நகரில் உள்ள குளம் சரிவர தூர்வாராததால் குளத்தில் செடி கொடிகள் ஆக்கிரமித்து மீண்டும் பழைய நிலையை அடைந்துள்ளது.
வில்லியனூர் பைபாஸ் சாலை அருகே 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூர்த்தி நகர் குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகமாகி, குளம் இப்போது குட்டையாக மாறிவிட்டது. மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் இந்த குளத்தில் விடப்படுகிறது. இதனால் கோடைகாலத்திலும் இக்குளத்தில் நீர் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இருந்தபடியே இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாய்க்கால் தூர்ந்து போயுள்ளது. இது குறித்து வந்த புகாரின்பேரில் அப்போதைய கலெக்டர் அருண் தலைமையிலான அதிகாரிகள்  குளத்தை பார்வையிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூர்வார நடவடிக்கை எடுத்தனர். புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட துறையினர் ஒருங்கிணைந்து, மூர்த்தி நகர் குளம் தூர்வார நடவடிக்கை எடுத்தனர்.  
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குளத்தை துார்வாரி அழகுபடுத்தும் பணியை ெசய்வதற்கு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்தது.

பிறகு குளத்தில் இருந்து மண்ணை எடுத்து குளத்தை சுற்றிலும் கரைகளை பலப்படுத்தினர். அதனை தொடர்ந்து குளத்தை ஆழப்படுத்துவதற்காக மையப்பகுதியில் இருந்த மண்ணை ெபாக்லைன் இயந்திரம் மூலம் எடுத்து டிப்பர் லாரிகளில் 200க்கும் மேல் லோடு கணக்கில் ரூ.1200க்கு விற்பனை செய்தனர். இருப்பினும் குளத்தை சரியாக தூர்வாராமல் மண்ணை விற்பனை செய்வதிலேயே அந்த நிறுவனம் ஆர்வம் காட்டியது. இதனால் குளத்தை ஆழப்படுத்தி, சுற்றியுள்ள கரைப்பகுதியில் நடைபாதை வசதி, செடிகள் நடவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

 இதனால் மூர்த்தி நகர் குளம் மீண்டும் செடி கொடிகள் வளர்ந்து பழைய நிலையை அடைந்துவிட்டது. எனவே மண் எடுப்பதற்காக மட்டுமே அந்த நிறுவனம் குளத்தை தூர்வார முன்வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு மீண்டும் தூர்வாரி மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.