வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து தொடங்கியது மேளதாளம் முழங்க பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

*டிரோன்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பு

*டிஐஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு

வேலூர் : வேலூரில் இந்து முன்னணி சார்பில் முக்கிய இடங்கில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விநாயகர்கள் சிலைகள் ஊர்வலம் மேளதாளத்துடன் நடந்தது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி டிஐஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 31ம் தேதி நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீடுகள் மட்டுமின்றி பொதுவெளிகளிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வீடுகள், வீதிகள், பொதுவெளிகளிலும் விநாயகர் சிலைகள் கொரோனா கால நெருக்கடி நிலவிய 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வைக்கப்பட்டு பண்டிகை களைக்கட்டியது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு என நகரம் தொடங்கி சிறு கிராமம் வரை வீதிகளில் சிறிய விநாயகர் சிலைகள் முதல் 10 அடி உயரமுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. மேலும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பேச்சு, கட்டுரை, ஓவியபோட்டிகளும் பல இடங்களில் நடந்தன.

இந்நிலையில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நேற்று வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடந்தன. வேலூரில் இந்து முன்னணி சார்பில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம் 12 மணியளவில் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் அருகில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க புறப்பட்டது. முன்னதாக நடந்த கூட்டத்துக்கு இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரத்தினகுமார் சிறப்புரை ஆற்றினார்.

மரகதகோட்டை வராஹிபீடம் வாராஹி சுவாமிகள், செங்காநத்தம் பகவதி சித்தர், அப்பாஜி சுவாமிகள் ஆகியோர் பேசினர். தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து விஜர்சன ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் டி.கே.டி.ஜி.சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், கோட்ட செயலாளர்கள் தீனதயாளன், ரவி, பொருளாளர் பாஸ்கர், மாவட்ட பாஜ தலைவர் மனோகரன், பாஜ மாநகராட்சி கவுன்சிலர் சுமதி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்குமார், சத்தியமூர்த்தி, ஜெகன்நாதன், கே.ஜி.குட்டி, ஆதிமோகன், ஆதிசிவா உட்பட இந்து முன்னணி, பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் புறப்பட்ட ஊர்வலம் மதியம் 1.30 மணியளவில் காகிதப்பட்டறை வழியாக  சைதாப்பேட்டை முருகன் கோயில் வந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு மீண்டும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மெயின் பஜார், கிருபானந்தவாரியார் சாலை, கமிசரி பஜார், தெற்கு காவல் நிலையம், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், கொணவட்டம் வழியாக சதுப்பேரியை மாலை 6 மணியளவில் அடைந்தன.

அங்கு சிலைகள் ஒவ்வொன்றாக கிரேன்கள் மூலம் எடுத்து சதுப்பேரியில் சிலை கரைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக குளத்தில் கரைக்கப்பட்டன. இதுதவிர நகரில் ஆங்காங்கே பகுதி விழாக்குழுவினர், பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிலைகளும், கொணவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட சிலைகள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட சிலைகள் சதுப்பேரிக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வல பாதையில் டிஐஜி (பொறுப்பு) சத்தியபிரியா, எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஆர்.டி.ஓ பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் தலைமையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு காவல் போலீசார், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்க்காவல் படையினர், வஜ்ரா வேன் அடங்கிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலப்பாதை முழுவதும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதற்காக தனி கட்டுப்பாட்டு அறையும் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காட்பாடியில் பிரம்மபுரம், தாராபடவேடு, பழைய காட்பாடி, பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தாராபடவேடு, கார்ணாம்பட்டு ஏரிகளில் கரைக்கப்படுகின்றன. அதேபோல் பேரணாம்பட்டு, தொரப்பாடி, அரியூர், ஊசூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், திருவலம், பொன்னை என மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்குள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் பக்தியில் வாண்டுகள்

எங்கெங்கு காணினும் சக்தியடா…என்ற பாரதியின் வாக்கு பலித்துவிட்டதோ என்ற நிலைதான் இன்று. ஆம், விநாயகர் சதுர்த்தியன்று வீதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளோ, இளைஞர் குழுக்களோ, விழாக்குழுக்களோதான் இதுவரை வைத்து வருகின்றன. ஆனால், நேற்றைய ஊர்வலத்தில் சுட்டித்தனத்துடன் விளையாடும் குணமுள்ள சின்னஞ்சிறுவர்கள் தங்களின் பெற்றோர் கொடுத்த சில்லரை காசுகளை இப்படி ஒன்று சேர்த்து தங்கள் சக்திக்கேற்ப விநாயகர் சிலையை வீதியில் வைத்து ஆசை, ஆசையாய் பூஜை செய்து 3வது நாளான நேற்று சைக்கிளில் வைத்து மேளம் அடித்தபடி எடுத்து வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. உண்மைதானே, அன்று திருநாரையூரில் ஒரு சிறுவனின் பிடிவாத பக்திக்கு செவிமடுத்து பிரசாதத்தை உண்டு களிப்பூட்டிய பிள்ளையாரும் ஒரு விளையாட்டு பிள்ளைதானே.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.