எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
டெல்லி நஜாப்கரில் 28 வயதான நாகேஷ் குமார், 23 வயதான சிவம் மற்றும் 22 வயதான மனிஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர்கள் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த காட்சிப் பதிவில், இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல் துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றனர்.
சிறிது நேரத்திலேயே இன்னும் இரண்டு பேர் அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, அவர்களிடம் இருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டு இந்த கும்பல் தப்பி ஓடுகிறது.
இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. சோம்வீர் என்பவர் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவரும் இவருடன் வேலைப் பார்க்கும் ஜெகதீப் சைனி என்பவரும், பஹர்கஞ்ஜில் உள்ள அலுவலகத்தில் இருந்து டெலிவரி எடுத்துக்கொண்டு டி. பி. ஜி தெருவிற்கு சென்றுள்ளனர். அங்குக் காவல் துறை அதிகாரிகள் தான் பரிசோதிக்கிறார்கள் என அவர்கள் நின்று கொண்டிருந்தபோது , அந்த கும்பல் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தப்பிச் சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து, கடந்த 7 நாட்களில், காவல் துறை அதிகாரிகள் சுமார் 700 சிசிடிவி புகைப்படங்களைப் பரிசோதனை செய்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் நான்கு பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றியுள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு கேப் டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் தேநீர் வாங்குவதற்கான பணத்திற்கு ஈடாக 100 ரூபாய் டிரைவரின் அக்கௌன்ட்டிற்கு Paytm மூலம் மாற்றியுள்ளார். பரிவர்த்தனை பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றவாளிகள் நஜாப்கரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றதை காவல்துறை கண்டுபிடித்தது. அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூருக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் வெள்ளி மற்ற வைரம் என ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு மூலக் காரணமாக இருந்த நாகேஷ், தனது நண்பர்கள் மற்றும் தாய் மாமாவுடன் சேர்ந்து இந்த குற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்” என காவல்துறை துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார்.