31 வருடங்களுக்குப் பிறகு தமிழில் அமலா

'70ஸ் கிட்ஸ்'களுக்கு மறக்க முடியாத ஒரு ஹீரோயின் அமலா. 80களின் மத்தியில் தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மைதிலி என்னை காதலி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு ''மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, கலியுகம், மாப்பிள்ளை, வெற்றி விழா, மௌனம் சம்மதம்” உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களும், அவரது நடிப்பும் அந்தக் கால இளைஞர்களைக் கவர்ந்தவை. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் அவர் நடித்த 'அஞ்சலி' கதாபாத்திரமும், அவரது நடிப்பும் இளம் பெண்களையும் கவர்ந்தவை. அப்படி ஒரு துறுதுறுப்பான கதாபாத்திரம் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்று கூட சொல்லலாம்.

தமிழில் பிரபலமாக இருந்த போதே தெலுங்கிலும் நடித்த அமலா, அங்கு முன்னணி நடிகராக இருந்த நாகார்ஜுனாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் 'கற்பூர முல்லை'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்த அமலா திருமணத்திற்குப் பிறகும், குழந்தை பெற்ற பிறகும் சினிமாவை விட்டு முழுமையாக ஒதுங்கினார். இடையில் தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் சில படங்களில் நடித்தார்.

தமிழில் ஏழு வருடங்களுக்கு முன்பு 'உயிர்மை' என்ற டிவி தொடரில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள 'கணம்' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. நேற்று அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அமலா சென்னை வந்திருந்தார்.

அமலா அறிமுகமான காலத்தில் இளைஞர்களாக, இளம் நடிகர்காளக இருந்த நாசர், ரவி ராகவேந்தர் ஆகியோர் இந்த 'கணம்' படத்திலும் நடித்துள்ளார்கள். நேற்று அவர்கள் அமலா ரசிகர்களாகவே மாறி அமலாவைப் பற்றி பாராட்டித் தள்ளிவிட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.