அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, எஸ்.எஸ்.ராஜமௌலி, நாகார்ஜுனா, ஜூனியர் என்டிஆர், மௌனி ராய் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் எனப் பல துறைகளில் பணியாற்றி வரும் கரண் ஜோஹர், தென் இந்திய சினிமா, வட இந்திய சினிமா என இந்திய சினிமாவைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று பேசியிருந்தார்.
இது பற்றிப் பேசிய அவர், “நாங்கள் எங்கள் படத்தை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். இயக்குநர் ராஜமௌலி சார் சொன்ன மாதிரி இது இந்திய சினிமா. இதை பாலிவுட், டோலிவுட் எனப் பிரித்துப் பார்க்கவேண்டாம். இந்த ‘வுட் (wood)’ என்ற சொல்லுக்கு அப்பால் நாங்கள் இருக்க விரும்புகிறோம். அந்த வகையில் இந்திய சினிமாவின் ஓர் அங்கமாக இருப்பதை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம். இனி ஒவ்வொரு படமும் இந்திய சினிமா என்றே வெளிவர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பரவிவரும் ‘Boycott’ கலாசாரத்தால் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் வசூலுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் பேசிவருகின்றனர்.