சார் நீங்க மூணு ஜீரோ சேர்த்து சொல்லிருக்கீங்க போல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் துருக்கியை சேர்ந்த கிரிப்டோ கரன்ஸி வர்த்தகர் ஒருவருக்கு முதலீட்டாளர்களின் பணத்தை திருடிய குற்றத்துக்காக 40,000 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாறி வரும் பொருளாதர சூழல்களுக்கேற்ப பொருளாதர காரணிகளும் மதிப்பீடுகளும் மாறி வருகின்றன. அப்படி சமீபத்தில் பிரபலமாகி வரும் கிரிப்டோ கரன்ஸி மீதான உலகளாவிய முதலீடுகள் மற்றும் அது சார்ந்த வர்த்தகங்கள் பெருகி வருகின்றன. அதோடு சேர்த்து அது சார்ந்த குற்றங்களும் பெருகி வருகின்றன.
அப்படி சில வருடங்களாகவே துருக்கியில் நிலவி வரும் பண மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டு மக்கள் கிரிப்டோ கரன்ஸி மீதான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் துருக்கியை சேர்ந்த கிரிப்டோ கரன்ஸி சார்ந்து இயங்கிய நிறுவனத்தால் லட்சக்கணக்கான மக்கள் ஏமாந்து நிற்கின்றனர்.
துருக்கியை சேர்ந்த ஃபாருக் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தோடேஸ் என்ற கிரிப்டோ கரன்ஸி வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார். கிட்டத்தட்ட 700000 த்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அவரிடம் முதலீடுகளை செய்திருந்ததாக தெரிய வருகிறது, இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட முதலீட்டாளர்களின் 2பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புள்ள பணத்தை எடுத்து கொண்டு ஃபாருக் தலைமறைவாகி விட்டதாக தெரிய வருகிறது.
கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் முதல் ஐந்து நாட்களுக்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. பின் திடீரென்று இணைய வழியில் தாக்குதல் நடப்பதாகவும் அதனால் ஒட்டுமொத்தமாக சர்வர்களை முடக்கி வைத்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் சார்பாக முதலீட்டார்களிடம் கூறப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து முதலீட்டாளர்களால் அவரவர் கணக்குகளை பயன்படுத்த முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்கா டாலர்களை எடுத்து கொண்டு நிறுவனத்தின் முதலாளியான ஃபாருக் தலைமறைவாகியிருக்கிறார்.
முதலீட்டாளர்களின் முறையீட்டுக்கு பிறகு நிறுவனத்தின் ஊழியர்களை கைது செய்து நிறுவனரான ஃபாருக்கை தேடி வந்தது துருக்கி அரசு. இந்நிலையில் அல்பேனியாவில் பதுங்கியிருந்த நிறுவனர் ஃபாருக்கை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். எனவே அவருக்கு சுமார் 40000 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.