பிராங் வீடியோ எடுக்கும் நபர்களின் வலையொளி (யூ-டியூப்) சேனல் முடக்கப்படுவதோடு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நநடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து, குறும்புத் தனமான வீடியோக்கள் (Prank Video) என்ற பெயரில் தங்களுக்கென்று உள்ள யூ-டியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துவருகிறது.
குறும்புத் தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகின்றனர்.
குறும்புத் தனமான வீடியோக்கள்
குறும்புத் தனமான வீடியோக்கள் எடுக்கும் நபர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையை விரும்பி பூங்காக்களை நாடி வருவோர்களிடையும், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருவோர்களிடையும், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் வருவோரிடையும் மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழல்களிலும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.
வரம்பு மீறல்
சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வண்ணம் எதிர்பாலினத்தவரை ஏதேச்சையாக நடப்பது போல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கின்றனர்.
திடீரென நிகழும் மேற்படி வரம்பு மீறிய செயல்களானது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான அதிர்ச்சியையும், மன ரீதியான திகைப்பையும் ஏற்படுத்துகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பின்னர் இது பிராங் வீடியோ என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானம் செய்கின்றனர். இருப்பினும் இச்செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் இடையே விரும்ப தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த வீடியோக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றியும், அவருக்கு தெரியாமலும் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குற்றவியல் நடவடிக்கை
குறுப்பு வீடியோக்கள் எடுக்கும் நபர்களின் இச்செயலானது தனிநபர் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. கோவை மாநகரிலும் சமீப காலமாக பிராங் வீடியோஸ் என்ற பெயரில் பந்தய சாலை போன்ற மக்கள் கூடும் இடங்களில் குறும்புத் தனமாக வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் குறித்தும் புகார்கள் வருகின்றன.
ஆகவே கோவை மாநகரில் எவரேனும் பிராங் வீடியோ எடுத்தல் எந்த விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார் வரப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீடியோ முடக்கப்படும்.
மேலும் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”