திரைப்படத்தின் படப்பிடிப்பு முதல் இசை வெளியீட்டு விழா வரை தொடர்ந்து எதிர்பார்ப்பு கொடுத்து வரும் திரைப்படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், இசை புயலின் இசையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.
சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பல்லாவரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன், “தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகர்களும் அல்ல, அது ரசிகர்கள்தான். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்துவதும் தமிழ் படங்கள்தான் தமிழ் சினிமாவை கெடுப்பதும் தமிழ் படங்கள் தான், நல்ல படங்களை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கையில் மக்கள் ஆதரவு தருவார்கள். படத்தின் வெற்றி விழாவில் சிம்புவின் கண்களில் நான் ஆனந்த கண்ணீரை பார்க்க வேண்டும்.” என்றவரிடம் தொகுப்பாளர் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கேள்வியை முன் வைத்தார், அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ” இரண்டு வருடத்திற்கு முன்பு கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு 2 படம் தொடர்பாக என்னிடம் வந்தார், அதன் பிறகு வரவில்லை.” என்றார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் கௌதம் மேனன், “அக்கதையை ஜெயமோகன் எழுதி வருகிறார்.” என்று அப்டேட்டை கூற அரங்கத்தில் விசில் பறந்தது. இதன் பிறகு மீண்டும் பேச தொடங்கிய உலகநாயகன், “சிம்பு நீங்கள் பல படங்கள் நடிக்க வேண்டும். ஆனால், ஒரு படம் மட்டும் நடிக்க வேண்டுமென்றால் அது என்னுடன் தான் நடிக்க வேண்டும்.” என்றவரிடம், “அதையும் நான் தான் தயாரிப்பேன்.” என்று பதிலளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இறுதியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கேரள ஆந்திர திரையரங்க விநியோக உரிமையை ராஜ்கமல் பிலிம்ஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், அதற்கு ‘நாளைக்கு ஆபீஸ் வாருங்கள்’ என்று என்று கூறி உரையை முடித்துக் கொண்டார் கமல்ஹாசன்.