சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக பணிச்சுமையால் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு படிப்பும், கடைசி ஓராண்டுக்கு பயிற்சி மருத்துவர் பணியும் வழங்கப்படுகிறது. எம்.டி., எம்.எஸ்.போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகளும் படிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. 8 மணி நேர பணியை சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கின் தீர்ப்பில் உறுதிசெய்துள்ளது.
ஆனால், இதை எந்த மருத்துவக் கல்லூரியும் நடைமுறைப்படுத்தவில்லை. பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் தினமும் 15 முதல் 20 மணி நேரம் பணியாற்றுகின்றனர். அதுவும், அதிக நோயாளிகள் அனுமதியாகும் தினத்தில் பணியாற்றும் நேரம் 25 மணி நேரத்தை கடந்து செல்கிறது.
மாதம் ஒருநாள் விடுமுறையும் இவர்களுக்கு முறையாக வழங்கப்படுவது இல்லை. இதன் காரணமாக, அதிக பணிச்சுமையால் மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக மன உளைச்சல் ஏற்பட்டு சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ந்து நடக்கின்றன.
டீன்களுக்கு அறிவுறுத்தல்
இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபுவிடம் கேட்ட போது, “தமிழக அரசின் உத்தரவுப்படி பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தினமும் 8 மணி நேரப் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும். விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்ககுழு அமைக்க வேண்டும். அவர்களது உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களுடன் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவமாணவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “எங்களுக்கு 8 மணி நேரப் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை ஏற்று, அனைத்து டீன்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனாலும், 8 மணி நேரப் பணி நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு,மருத்துவ மாணவர்களின் பற்றாக்குறை முக்கிய காரணம். தினமும் 3 ஷிப்ட்களுக்கு ஆட்கள் இருந்தால் அனைவருக்கும் 8 மணிநேரப் பணி இருக்கும். தற்போது 2 ஷிப்ட்களுக்கு மட்டும்தான் ஆட்கள் இருக்கிறோம். நாங்களே 3 ஷிப்ட்களுக்கும் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. நாங்கள் பணியாற்றவில்லை என்றால்,உரிய சிகிச்சை கிடைக்காமல் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் தாமதமின்றி குறிப்பிட்ட காலத்தில் கலந்தாய்வு நடத்தினால் புதிய மருத்துவ மாணவர்கள் வருவார்கள். பணிச்சுமை குறையும். அனைவருக்கும் 8 மணி நேரப் பணி என்பதை நடைமுறைப்படுத்த முடியும்” என்றனர்.