மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறையால் ஆளுங்கட்சி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கால்நடை ஊழல் தொடர்பாக மற்றுமொரு ஆளுங்கட்சி அமைச்சரிடம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிலக்கரி ஊழல் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியிடம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
பின்னர் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக அபிஷேக் பானர்ஜி, “தேவைப்பட்டால், 30 முறைகூட இதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், பா.ஜ.க முன் ஒருபோதும் தலைகுனிய மாட்டேன். மேலும், நான் தவறு செய்திருக்கிறேன் என்பதை நிரூபிக்குமாறு அமித் ஷாவுக்கு நான் சவால் விடுக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிலர், அமித் ஷாவை கிண்டல் செய்யும் விதமாக டி-சர்ட் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர்கள் ரிஜு தத்தா, அருப் சக்ரவர்த்தி, அமித் ஷாவை ‘India’s Biggest Pappu’ எனக் குறிப்பிட்டு அவரின் படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்திருக்கும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்றனர்.
மேலும் இது குறித்து ரிஜு தத்தா, “தாங்கள் தோல்வியடைந்த ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கிருக்கும் அரசுகளைக் கவிழ்க்க மத்திய அமைப்புகளைப் பா.ஜ.க-வினர் பயன்படுத்துகின்றனர். உள்துறை அமைச்சராக அமித் ஷாவின் கீழ் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. மேலும், அனைவருக்கும் தேசியத்தைக் கற்பிக்கும் அமித் ஷாவால், தன்னுடைய மகனுக்குத் தேசியத்தைக் கற்பிக்க முடியவில்லை. இவையனைத்துமே அவர் ஒரு திறமையற்ற உள்துறை அமைச்சர் என்பதை நிரூபிக்கிறது. எனவே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து நாங்கள் அவரை ‘India’s Biggest Pappu’ என்று அழைக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.