வாஷிங்டன்: “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த நாட்டின் எதிரி” என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ட்ரம்ப்பின் வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார். ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது தன்னுடன் சில ஆவணங்களைக் கொண்டு சென்றதாகவும், இந்த ஆவணங்கள் தொடர்பாகத்தான் இந்த சோதனை நடந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும் இந்தச் சோதனையின் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார், இது அரசியல் பழிவாங்கல் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், வெள்ளை மாளிகையோ ட்ரம்ப் வீட்டில் நடந்த சோதனைக்கும் அமெரிக்க அதிபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தது.
இந்த நிலையில், பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்கள் சார்பில் நடந்த பேரணியில் ட்ரம்ப் பங்கு கொண்டார். அதில் அவர் பேசும்போது, “நாம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அமெரிக்க சுதந்திரதிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதற்கேற்ப சில வாரங்களுக்கு முன்பு நடந்ததே உதாரணம். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். மோசமான, வெறுக்கத்தக்க பேச்சுகளை அமெரிக்க அதிபர் பேசி வருகிறார். பைடன் இந்த நாட்டின் எதிரி” என்று பேசினார்.