அரசுக்கு தெரியாமலேயே அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவு ரத்து நடவடிக்கையா? – ஓபிஎஸ்

சென்னை: அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை ரத்து செய்ததை திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உழவுக்கும்‌ தொழிலுக்கும்‌ வந்தனை செய்வோம்‌, வீணில்‌ உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்‌” என்று கூறிய பாரதியார், பொருளாதாரத்தில்‌ ஒரு நாடு சிறக்க வேண்டுமெனில்‌,உரிமை பெற்ற பாரதம்‌ வீறுபெற்று உலக அரங்கில்‌ தனிச்‌ சிறப்புடன்‌ விளங்க வேண்டுமெனில்‌, தொழிற்‌கல்வி வளர்ச்சி பெறுதல்‌ வேண்டுமென்று வலியுறுத்தினார்‌. இப்படிப்பட்ட இன்றியமையாத‌ தொழிற்‌ கல்விக்கு மூடு விழா நடத்த திமுக அரசு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.

அம்மா உணவகங்களை நீர்த்துப்‌ போகச்‌ செய்தது, தாலிக்குத்‌ தங்கம்‌ வழங்கும்‌ திட்டத்தை கைவிட்டது, அம்மா இரு சக்கர வாகன மானியத்‌ திட்டத்தை கைவிட்டது, அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்தை ரத்து செய்தது என்ற வரிசையில்‌ தற்போது அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை ரத்து செய்ய தி.மு.க. அரசு உத்தரவிட்டிருப்பதைப்‌ பார்க்கும்போது, நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துகின்ற அரசாக தி.மு.க.அரசு விளங்குகின்றது என்பது தெள்ளத்‌ தெளிவாகிறது.

தமிழகத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட பள்ளிக்‌ கல்வித்‌ துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்‌, இதன்‌ முதற்கட்டமாக தற்காலிக ஆசிரியாகள்‌ உள்ள பள்ளிகள்‌, ஓய்வுபெறும்‌ நிலையில்‌ உள்ள ஆசிரியர்கள்‌ பணியாற்றும்‌ பள்ளிகள்‌ ஆகியவற்றில்‌ உள்ள தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகளை மூடுமாறும்‌, அங்கு பதினொன்றாம்‌ வகுப்பு தொழிற்கல்வி பாடப்‌ பிரிவில்‌ சேர்க்கப்பட்ட மாணவர்‌ சேர்க்கையை ரத்து செய்யுமாறும்‌, அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறு பாடப்‌ பிரிவுக்கு மாற்றுமாறும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை ஆணையர்‌ உத்தரவிட்டுள்ளதாகவும்‌, இதன்‌ அடிப்படையில் தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்‌ போன்ற மாவட்டங்களில்‌ உள்ள பல்வேறு பள்ளிகளில்‌ தொழிற்கல்வி படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்‌ ஊடகங்களில்‌ செய்திகள்‌ வந்தன.

இந்தச்‌ செய்தி வெளியானதையடுத்து, இதுகுறித்து உரிய விவரங்களை அளிக்குமாறு பள்ளிக்‌ கல்வித்‌ துறைச்‌ செயலாளா்‌ கேட்டுள்ளதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்தி வந்துள்ளது. இதிலிருந்து, அரசுக்கு தெரியாமலேயே, அரசுப்‌ பள்ளிகளில்‌ உள்ள தொழிற்கல்வி பாடப்‌ பிரிவை ரத்து செய்ய பள்ளிக்‌ கல்வித்‌ துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத்‌ தெரிகிறது.

இதன்மூலம்‌, – அரசுக்கும்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கும்‌ இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும்‌ தெளிவாகிறது.ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக இருப்பதுதான்‌ தொழிற்கல்வி பாடப்‌ பிரிவுகள்‌ மூடப்படுவதற்கு காரணம்‌ என்று சொல்லப்படுகின்ற நிலையில்‌,ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்பி அதனைத்‌ தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்காமல்‌, அவற்றையெல்லாம்‌ மூடும்‌ முடிவை பள்ளிக்‌ கல்வித்‌ துறை எடுத்திருப்பது “மூட்டைப்‌ பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியது மாதிரி என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. இது நாட்டின்‌ கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு மட்டுமல்லாமல்‌, பொருளாதாரம்‌ பாதிப்படையவும்‌, வேலைவாய்ப்புகள்‌ இருந்தும்‌ அதற்கான ஆட்கள்‌ இல்லாத சூழ்நிலை உருவாகவும்‌ வாய்ப்பு இருக்கிறது.

அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்வி ரத்து செய்யப்படுவது என்ற முடிவு கடும்‌ கண்டனத்திற்குரியது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்‌. எனவே, தமிழக முதல்வர் இதில்‌ உடனடியாகத்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, அரசுப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடப்‌ பிரிவுகள்‌ மூடப்படுவதை தடுத்து நிறுத்தவும்‌, தொழிற்கல்வி தொடர்ந்து சிறப்பாக செயல்படவும்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.