தமிழகத்தில் சமீப காலமாக ப்ராங் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் என குறிவைத்து ப்ராங் வீடியோவை எடுத்து அவர்களது யூட்டுப் பக்கத்தில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள் , நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் ( Prank Videos ) தங்களுக்கென்று யூ – டியூப் சேனல் வைத்துக் கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ – டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்களிடையேயும் , நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்கள் இடையேயும், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இடையேயும் மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.