பெரியகுளம்: பெரியகுளத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரிடம் ரூ.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற கார் டிரைவரை தென்காசியில் போலீசார் கைது செய்தனர். அது, இபிஎஸ் அணியின் முக்கிய பிரமுகரை இழுக்க கொண்டு சென்ற பணம் என்று கூறப்படுகிறது.தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஓபிஎஸ்.சின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு இவர் மிகவும் நெருக்கமானவர்.
தேனி மாவட்ட அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். நாராயணனின் கார் டிரைவராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் மற்றும் மற்றொரு ஸ்ரீதர் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி காரில் 50 லட்சத்துடன் பெரியகுளம் சென்று கொண்டு இருந்தனர். ஆண்டிபட்டியில் இறங்கிய நாராயணன், டிரைவர் ஸ்ரீதரிடம், காரில் உள்ள 50 லட்சத்தை வீட்டில் ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறு கூறி விட்டு, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகானின் காரில் பெரியகுளம் சென்றுள்ளார். இதையடுத்து, காருடன் நாராயணன் வீட்டிற்குச் சென்ற ஸ்ரீதர், அங்கு காரை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் ஒப்படைக்க கூறிய 50 லட்சத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் தேடியும் ஸ்ரீதரை கண்டுபிடிக்க முடியவில்லை. பணத்துடன் ஸ்ரீதர் காணாமல் போனது குறித்து ஸ்ரீதர் வீட்டிற்கும் சென்று நாராயணனின் ஆட்கள் விசாரித்துள்ளனர். எந்தத் தகவலும் கிடைக்காததால், பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக ஸ்ரீதர் மீது நாராயணன், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.ஸ்ரீதர் மேல் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், ‘‘எனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்று ஸ்ரீதரின் மனைவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டு புகார்கள் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் ஸ்ரீதரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அதிமுக பிரமுகர் நாராயணனின் 50 லட்சம் ரூபாயுடன் தலைமறைவான டிரைவர் ஸ்ரீதரை, தென்காசியில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அங்கிருந்து அவரை பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கொண்டு சென்ற ரூ.50 லட்சத்தில், அவரிடம் இருந்து 15 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை ஸ்ரீதர் தனது உறவினரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
*அட்வான்ஸ் பணம்?
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளுக்கிடையே ஆதரவாளர்களை இழுப்பதில் போட்டா போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில், மதுரையை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரை எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு இழுக்க பேரம் பேசப்பட்டது. அந்த பேரத்தின் அட்வான்ஸ் தொகையை அதிமுக பிரமுகர் மூலமாக கொண்டு சென்று சேர்க்கும் பணி நாராயணன் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக தான் நாராயணன் ரூ.50 லட்சத்தை காரில் கொண்டு சென்றுள்ளதாகவும், இந்த செட்டில்மென்ட் பணத்தை தான் நாராயணனின் கார் டிரைவர் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.