உச்ச நீதிமன்ற சர்க்யூட் பெஞ்ச் சென்னையில் அமைவது எப்போது? – ‘அரசியல் பேதமின்றி அழுத்தம்’ கொடுக்க மூத்த வழக்கறிஞர்கள் வேண்டுகோள்

உச்ச நீதிமன்ற சர்க்யூட் பெஞ்சை சென்னையில் அமைக்க அரசியல் பேதமின்றி அனைத்து கட்சியினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டின் கடைகோடியான கன்னியாகுமரியில் இருக்கும் சாமானிய மக்கள் தலைநகரான டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமையை நிலைநாட்டவும், நீதியைப் பெறவும் பல லட்சங்களையும், காலத்தையும் செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் தமிழகத்தை மையமாகக் கொண்டு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களுக்கும் பொதுவாக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்சை (அமர்வு) அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இதுதொடர்பாக திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், சென்னை மட்டுமின்றி நாட்டின் 4 திசைகளிலும் மும்பை, டெல்லி மற்றும் கோல்கட்டா ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்ச்களை அமைக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்தும், அந்த கோரிக்கைக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை.

தமிழக அரசின் சார்பில் அழுத்தம்

திமுக எம்பி வில்சனின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், சென்னையில் உச்ச நீதிமன்ற சர்க்யூட் பெஞ்சை அமைக்க வேண்டுமென சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழக அரசின் சார்பிலும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

சென்னையில் உச்ச நீதிமன்ற சர்க்யூட் பெஞ்சை அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனது வைத்தால் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து நிறைவேற்றிக் கொடுக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்பதற்கான அச்சாரமே அது.

மேலும், நீதித் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத் துவம் கொடுத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்போதுகூட உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்காக ஒருங்கிணைந்த அடுக்குமாடி நீதிமன்ற வளாகம் கட்டவும், ஏற்கெனவே சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வந்த பாரம்பரிய கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைத்து உயர் நீதிமன்றத்தின் சில நீதிமன்றங்களை அங்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.4) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோருடன் இன்னும் சில தினங்களில் பணி ஓய்வு பெறவுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீ்ஷ்வர்நாத் பண்டாரி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவிலும், உச்ச நீதிமன்ற சர்க்யூட்பெஞ்சை சென்னையில் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் மீண்டும் குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் இ. ஓம்பிரகாஷ் கூறும்போது, ‘‘சட்ட மாமேதை அம்பேத்கரின் கனவு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உடனடி நீதி கிடைக்க வேண்டுமென்பதே. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். ஆனால் வசதியானவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று வழக்கறிஞர்களை அமர்த்தி சட்டப் போராட்டம் நடத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு சமம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமநீதியும், சமவாய்ப்பும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டும். அதற்கு யாரும் முட்டுக்கட்டை போட முடியாது. உச்சநீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்ச் சென்னையில் அமைந்தால் அதன்மூலம் தமிழகம்மட்டுமின்றி தென் மாநில மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும்.

நீதிபதிகள் நினைத்தால் சாத்தியம்

ஆனால் இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் முதலில் மனது வைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் நொடிப்பொழுதில் முடிவு எடுத்து அமைத்துவிட முடியும். அதன் பிறகுதான் மத்திய, மாநில அரசுகள் எல்லாம். தமிழகத்தைப் பொருத்தமட்டில் இதற்காக அனைத்து கட்சிகளும் அரசியல் பேதமின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா கூறியதாவது:

தற்போது நாட்டின் மக்கள் தொகை 138 கோடியைத் தாண்டி விட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து 30 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை யானைப் பசிக்கு சோளப்பொறி கதையாகத்தான் உள்ளது.

மேலை நாடுகளை ஒப்பிடும்போது நீதிபதிகளின் நியமனம் இந்தியாவில் மிகமிகக் குறைவு. தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களின் வழக்குதான் அதிகமாக நிலுவையில் இருந்து வருகின்றன. தமிழகத்தின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை. நீதிபதிகளுக்கு இருக்கும் பணிச்சுமையால் அரசியலமைப்புச் சட்டம் ரீதியாக எழும் கேள்விகளுக்குக்கூட தீர்வு காண முடியவி்ல்லை.

எட்டா தொலைவில் நீதி

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்கள் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு அதிக அளவில் பணம் செலவழித்து தீர்வு காண முடியாத சூழல் உள்ளது. ஒருவிதத்தில் இதுவும்கூட திட்டமிட்ட பாகுபாடுதான். நாட்டுமக்கள் அனைவரும் சமம் எனும்போது, நீதி மட்டும் எட்டா தொலைவில் இருக்கக் கூடாது.

அரசியலமைப்பு சட்டரீதியாக நீதித் துறையில் உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பு உச்ச நீதிமன்றம். ஆனால் தற்போது மேல்முறையீட்டு வழக்குகளுக்கான நீதிமன்றமாக அது மாறி வருகிறது.

எனவே, பிரத்யேகமாக அரசியலமைப்பு சட்ட ரீதியான வழக்குகளை மட்டும் விசாரிக்கும் அமைப்பாக உச்ச நீதிமன்றம் மாற வேண்டும். அத்துடன் மேல்முறையீட்டு வழக்குகளை தனியாக விசாரிக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்க்யூட் பெஞ்ச் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.