இஸ்தான்புல்: உணவு தானியங்களை ஏற்றி வருவதற்காக உக்ரைன் சென்ற சரக்குக் கப்பல் பாஸ்பரஸ் நீரிணை பகுதியில் இன்ஜின் கோளாறால் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோல் நடப்பது இது 2-வது முறையாகும்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இதனால், துறைமுகங்கள் மூடப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து, ஐ.நா. சபையும் துருக்கியும் மத்தியஸ்தம் செய்தன. இதனால் கடந்த ஜூலை 22-ம் தேதி ரஷ்யா, உக்ரைன் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, தானியங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக உக்ரைனில் 3 துறைமுகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி இதுவரை 17.7 லட்சம் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரிஜா என்ற சரக்குக் கப்பல் தானியங்களை ஏற்றி வருவதற்காக உக்ரைன் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு அருகே பாஸ்பரஸ் நீரிணை பகுதியில் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தக் கப்பல் இழுவைப் படகுகள் மூலம் நங்கூரப் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு இன்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது.
இது இந்த வாரத்தில் நடந்த 2-வது சம்பவம் ஆகும். லேடி ஜெமா என்ற சரக்குக் கப்பல் 3 ஆயிரம் டன் தானியங்களுடன் உக்ரைனிலிருந்து புறப்பட்டது. இது கடந்த 1-ம் தேதி இரவு இஸ்தான்புல் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைதட்டியது குறிப்பிடத்தக்கது.