ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ரமோன் மக்சேசே விருது, மறைந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ‘ரமோன் மக்சேசே’ பெயரால் வழங்கப்படுகிறது. 1958ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சமூகத்திற்குத் தன்னலமற்ற சேவை செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 67-வது ‘ரமோன் மக்சேசே’ விருது நிபா வைரஸ் தொற்று, கோவிட் பெருந்தொற்று காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகக் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு ‘ரமோன் மக்சேசே’ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட இருந்தது. இந்த விருதுக்கானப் பொது அறிவிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அந்த அறக்கட்டளை, சர்வதேச விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதை அறிவித்து, விருதை ஏற்கும் விருப்பத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கும்படி கே.கே.ஷைலஜாவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தது.
இதையடுத்து சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான ஷைலஜா, இது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். பின்னர் விருதை ஏற்க இயலாது என்று ஷைலஜா, ரமோன் மக்சேசே அறக்கட்டளைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சுகாதாரத்துறை அமைச்சராக ஷைலஜா, கட்சி தன்னிடம் ஒப்படைத்த கடமையை மட்டும் செய்வதாகக் கட்சி கருதுகிறது. மேலும் நிபா மற்றும் கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மாநிலத்தின் முயற்சிகள் ஒரு கூட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். எனவே அவர் தனது தனிப்பட்ட திறனில் விருதை ஏற்க வேண்டியதில்லை. இதைத் தொடர்ந்து, விருதை ஏற்க இயலாது” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் போராளிகளை வீழ்த்தியதில் பெயர் பெற்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ‘ரமோன் மக்சேசே’ பெயரில் இவ்விருது வழங்கப்படுவதால் இந்த விருதை வாங்கக் கட்சி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியராகவும், அமைச்சராகவும் மக்களுக்காகச் சிறப்பாக பணியாற்றியவர் கே.கே.ஷைலஜா. இவர் இந்த விருதை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த விருதைப் பெறும் கேரளத்தைச் சேர்ந்த ஐந்தாவது நபராக இருந்திருப்பார். மேலும், ‘ரமோன் மக்சேசே’ விருதைப் பெறும் முதல் கேரளப் பெண்மணியாகவும் அவர் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.