'உ.பி.,யில் 5 ஆண்டுகளாக எந்த கலவரமும் இல்லை' – சொல்கிறார் யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை என, அம்மாநில முதலமைச்சர் யாேகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு 235 கோடி ரூபாய் மதிப்பிலான 116 உள் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத் தொடங்கி உள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பாதுகாப்பை மீற அரசு அனுமதிக்காது. தற்போதைய ஆட்சியின் கீழ் எந்த வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை. மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டம், ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை அடைய உத்தர பிரதேச அரசு அயராது உழைத்து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் முற்றிலும் கலவரம் இல்லாத மாநிலமாகவும், குற்றம் இல்லாத மாநிலமாகவும் மாறி விட்டது. இதற்கு முன்பு போலீசாருக்கு வீடு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது போலீசாருக்கு அதி நவீன வசதிகளுடன் குடியிருப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மகளிர் விடுதி கட்டும் பணி முடிந்துள்ளது. காவல் துறையினருக்கும் சிறந்த குடியிருப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.