அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில் ஜூலை 11 பொதுக்குழு விவகாரத்தின் மீது தான் ஒட்டுமொத்த கவனமும் குவிந்துள்ளது. இதைச் சுட்டிக் காட்டி நீதிமன்றங்களில் மாறி மாறி வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முதலில் அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகவும், மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு செல்லும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கியது.
கடைசியாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
தரப்பினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த விஷயத்தில் முந்திக் கொண்ட எடப்பாடி தரப்பு முன்கூட்டியே கேவியட் மனுவை தாக்கல் செய்து ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பின் கருத்தைக் கேட்ட பின்பே தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம் உச்ச நீதிமன்ற வழங்கப்படவுள்ள தீர்ப்பு என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து ஓ.பன்னீர்செல்வம் எப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்? எத்தகைய வாதத்தை முன்வைப்பார்? தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்றெல்லாம் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தக்கள் தலையை போட்டு குழப்பி கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இதற்கிடையில் தனியார் யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், இரண்டாவது தீர்ப்பு வருவதற்கு முன்பு எடப்பாடி தரப்பில் இருந்து பலரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட தயாராக இருந்தனர். தீர்ப்பு மட்டும் சாதகமாக வரட்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டதால் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.
இதன்மூலம் அவர்கள் பக்கத்தின் நிலையை புரிந்து கொள்ளலாம். எடப்பாடிக்கு கிடைத்த தீர்ப்பு என்பது தற்காலிக வெற்றி மட்டுமே. விரைவில் எங்களுக்கு சாதகமாக விஷயங்கள் நடக்கும். ஒருவேளை எடப்பாடியே கட்சியை கைப்பற்றினாலும் வெற்றி என்பது எட்டாக் கனியாக தான் இருக்கும். ஏனெனில் வாக்குகள் பிளவுபடும். அதன்பிறகு அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக முடிந்துவிடும்.
எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ஜனநாயக ரீதியில் சிறந்த எதிர்க்கட்சியாகவும் அதிமுகவால் செயல்பட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே அதிமுகவில் உட்கட்சி குழப்பங்கள் எத்தனை நாட்கள் நீடித்து கொண்டே செல்கிறதோ, அதுவரை திமுக சச்சரவின்றி நடைபோடும் என்பதில் சந்தேகமில்லை. கடைசியில் அதிமுக என்னவாக போகிறது? அதன் எதிர்காலம் என்னவென்பது தான் அக்கட்சி தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.