கருணாநிதி ஆசிரியரை பற்றி தெரியுமா? தமிழுக்கு பெருமை சேர்ந்த சி.இலக்குவனார்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி வந்துவிட்டால் ஆசிரியர்கள் தினம் கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்வது, முன்னாள் ஆசிரியர்களை நினைவு கூறுவது என நிகழ்வுகள் அரங்கேறும். குறிப்பாக ஆசிரியர் தினத்திற்கு வித்திட்ட சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பற்றி தவறாமல் பேசிவிடுவோம். இவர் வாழ்ந்து மறைந்த அதே தமிழகத்தில் அறிந்திடாத சிறப்புமிக்க ஏராளமான ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் அறியப்பட வேண்டியவர் சி.இலக்குவனார். இன்றைய இளைய சமூகத்தினர் பலருக்கு இது தெரியாத பெயராக இருக்கலாம். ஆனால் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் ஆசிரியர் என்றால் நமக்கு நெருக்கமான நபராக மாறிவிடுவார்.

ஆசிரியர், தமிழறிஞர், இலக்கிய ஆராய்ச்சியாளர், நூலாசிரியர், சிறந்த பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர், களப் போராளி என பன்முகங்கள் கொண்டவர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் குறுநிலக்கிழார் சிங்காரவேலர் -ரத்தினத்தாச்சி ஆகியோருக்கு மகனாய் பிறந்தவர். திண்ணைப் பள்ளியிலும், அரசுப் பள்ளியிலும் படித்தவர். இவரது சொந்த பெயர் லட்சுமணன். 8ஆம் வகுப்பு படித்த இவருடைய தமிழாசிரியர் தான் ”இலக்குவன்” என்று பெயரை மாற்றி வைத்தார். அப்போது முதல் தமிழ் மீதான ஆர்வம் பெரிதும் அதிகரித்தது.

பின்னர் ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளி, திருவையாறு அரசர் கல்லூரி என படித்து பட்டம் பெற்றார். பொதுவாக தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தின் மீதான ஈடுபாடு என்பது குறைவாகவே இருக்கும். ஆனால் இவரோ ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்று பிஓஎல் பட்டமும், தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும் பெற்றிருக்கிறார். விரிவுரையாளர், பேராசிரியர், முதல்வர் என பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிந்துள்ளார்.

அதில் குலசேகரன்பட்டினம் தமிழ் கல்லூரி, திருநெல்வேலி இந்து கல்லூரி, விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அடங்கும். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார். மதுரை அடுத்த திருநகரில் 1962ல் தமிழ் காப்பு கழகத்தை தொடங்கினார். இதன் தலைவராக சி.இலக்குவனார், பொதுச் செயலாளராக தமிழறிஞர் ரா.இளங்குமரன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

இந்த கழகம் முன்னெடுத்த சிறப்பான 4 செயல் திட்டங்கள் ”தமிழில் பேசுக, தமிழில் எழுதுக, தமிழில் பெயரிடுக, தமிழில் பயில்க” என்பது தான். திருவாரூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய போது, அவரது மாணவராக இருந்தவர் தான் முன்னாள் முதல்வர்

. அதுமட்டுமின்றி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்க் கவிஞர் இன்குலாப், நா.காமராசன் உள்ளிட்டோரும் மாணவர்களாக இருந்தது கவனிக்கத்தக்கது. குறிப்பாக தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றிய போது 1963ஆம் ஆண்டு தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாராட்டுக் கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி வகித்த போது ஒருமுறை போப் ஆண்டவரை சந்தித்தார். அப்போது அவருக்கு அண்ணா அளித்த பரிசு தொல்காப்பியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு தான். தனது பணிக் காலத்தில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பல்வேறு விஷயங்களை சி.இலக்குவனார் நடைமுறைப்படுத்தினார். வகுப்பறையில் மாணவர்கள் ”யெஸ் சார்” என்று ஆங்கிலத்தில் கூறி வந்ததை மாற்றி “உள்ளேன் ஐயா” என்று கூற வைத்தவர். தமிழ் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக வர முடியாது என்றிருந்த காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் புதிதாக சட்டம் இயற்ற உந்துதலாக இருந்தவர்.

பிறப்பு: நவம்பர் 17, 1909

இறப்பு: செப்டம்பர் 3, 1973

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இவரது நூற்றாண்டை ஒட்டி நவம்பர் 26, 2009 அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையால் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சி.இலக்குவனார் 1965 பிப்ரவரியில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இதையடுத்து தமிழை பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்று 1965 மே மாதம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல திட்டமிட்டார். அப்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். எழிலரசி, என் வாழ்க்கை போர், அம்மூவனார், வள்ளுவர் வகுத்த அரசியல், தொல்காப்பிய ஆராய்ச்சி என ஏராளமான நூல்களை எழுதி தமிழுக்கு தொண்டாற்றிய சி.இலக்குவனார் அவர்கள், தமிழ் பேசும் நல்லுலகத்தால் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.