ஜம்மு: காங்கிரசில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரஸ் கட்சி உடனான தனது 50 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டு விலகினார். சோனியாவுக்கு எழுதிய 5 பக்க ராஜினாமா கடிதத்தில், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். இவருக்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
அதன்படி, தனது புதிய அரசியல் பயணத்தை ஜம்முவில் நேற்று அவர் தொடங்கினார். ஜம்முவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட அவருடைய முதல் மாநாட்டிற்கு, காரில் ஊர்வலமாக சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதில், புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். மாநாட்டில் ஆசாத் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்பது, காஷ்மீர் வாழ் மக்களின் நிலம், வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாப்பது, காஷ்மீரி பண்டிட்டுகளின் மறுவாழ்வு, மாநிலத்தின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகியவையே எனது புதிய கட்சியின் பிரதான குறிக்கோளாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள், தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்,’ என தெரிவித்தார்.