சிவகார்த்திகேயனின் இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பு பலரையும் எளிதில் கவர்ந்துவிட்டது, தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. கடந்த மே மாதம் 13ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பலரது கல்லூரி கால நினைவுகளை நினைவுபடுத்தும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, முனீஷ்காந்த், காலி வெங்கட், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய், ராதா ரவி, ராஜு ஜெயமோகன், பாலசரவணன் மற்றும் சிங்கம்புலி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அனிரூத் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பின்னை பெற்றிருந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் மொத்தமாக 130 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் யாவும் இதே வசூல் அல்லது இதற்கு மேலும் வசூல் செய்து சாதனை படைத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், டான் படம் செய்த வசூல் பெரியதாக பார்க்கப்படுகிறது. இந்த படம் பெற்ற வசூல் இவ்வளவு உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை அறிமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியான படங்கள் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திடாத நிலையில், இளம் அறிமுக இயக்குனரான சிபி சக்ரவர்த்தியின் படம் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. ‘டான்’ படத்திற்கு கிடைத்த வெற்றியின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தை சிபி இயக்குவதற்கு தகுதியானவர் என்று பலரும் கூறி வருகின்றனர், இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.