மதுரை: சசிகலா ட்விட்டரில் ஒற்றுமை என பதிவிட்டுள்ளதிற்கு “அது காலம் கடந்த விவாதம்” என சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின் 152 அடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை ஜெயலலிதா பெற்றுத் தந்தார். அதன்படி அதிமுக ஆட்சியில் மூன்று முறை 142 அடியாக முல்லை பெரியார் அணை நீர்மட்டம் தேக்கபட்டது.
உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக தான் ரூல்கர்வ் என்ற உத்தரவு அமைந்துள்ளது. இது நமக்கு பாதகமாக உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.பழனிசாமி அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், கேரளா சென்ற முதல்வர் ஸ்டாலின் முல்லை பெரியாறு பிரச்சனையில் தீர்வுகாண முயற்சி செய்தாரா என்பதற்கு வரக்கூடிய காலங்களில் பலனைப் பொறுத்துதான் இருக்கும்.
திமுகவினர் முதலில் எட்டு வழிச்சாலையை எதிர்த்தார்கள், தற்போது ஆதரிக்கிறார்கள். எட்டு வழிச்சாலையை காலத்தின் கட்டாயம் என பேசுகிறார்கள்.
6 பேர் விடுதலை தற்போது வரை கேள்விக்குறியோடு உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்களே விடுதலை செய்வோம், நாங்கள் விடுதலையை முன்னெடுத்து செல்வோம் என பேசினார்கள். ஆனால் தற்போது வாய்மூடி மவுனியாக உள்ளனர்.
டாஸ்மாக் கடையை மூட குடும்பத்தோடு போராட்டம் நடத்திய நிலையில், தற்போது பள்ளி, கல்லூரி, கோவிலுக்கு அருகே இடமாற்றம் என்ற பெயரில் மதுக்கடை வைக்கிறார்கள். இன்றைக்கு நில எடுப்பு பணிகள் கூட திமுகவால் செய்ய முடியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அதிமுக ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளில் சிறு சலப்பு கூட எற்படவில்லை, புதிய விமான நிலைய விரிவாக்கம் வாழ்வாதாரத்தை எந்தளவு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்கள் பார்க்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக உள்ளது என நீதிமேன்றமே தீர்ப்பளித்துவிட்டது”என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சசிகலா ஒற்றுமை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ”காலம் கடந்த விவாதமாக உள்ளது” என்று ஆர்.பி.உதயகுமார் கூறி கடந்து சென்றார்.