“சசிகலாவின் ட்விட்டர் பதிவு, காலம் கடந்தது” என்று கருத்து தெரிவித்துள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின்னர் 152 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அம்மா பெற்றுத்தந்தார். கடந்த ஆட்சிக்காலத்தில் மூன்று முறை 142 அடியாக முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டது.
தற்போது ரூல்கர்வ் என்ற விதி அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி செயல்படுத்தப்படுகிறதா? அது சட்டமா? விதியா? உத்தரவா? ஆணையா? என்று தெரியாமல் விவாதப்பொருளாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக ரூல்கர்வ் உத்தரவு பாதகமாக உள்ளது. இது குறித்து எடப்பாடியார் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல் காவிரி பிரச்னையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். எடப்பாடியார் காவிரி பிரச்னைக்குத் தீர்வு கண்டார். நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வெளியிட்டும் தற்போது அது சவாலாக உள்ளது.
கேரளாவில் நடைபெற்ற தென் மண்டலக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். முல்லைப்பெரியாறு, காவேரி பிரச்னையில் தீர்வுகாண முயற்சி செய்தாரா… இல்லையா என்பது வரும் காலங்களில்தான் தெரியும்.
எடப்பாடியாரை இடைக்காலப் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்தது 100 சதவிகிதம் செல்லும் என்றும், தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புரியாதவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் புரிந்துகொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடியாருக்கு பல பணிகள், கடமைகள் உள்ளன.
6 பேர் விடுதலை தற்போதுவரை கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விடுதலையை முன்னெடுது செல்வோம் எனப் பேசினார்கள். ஆனால், தற்போது மௌனமாக உள்ளனர்.
மதுக்கடையை மூட போராட்டம் நடத்தியவர்கள் தற்போது பள்ளி, கல்லூரி, கோயிலுக்கு அருகே இடமாற்றம் என்ற பெயரில் மதுக்கடை வைக்கிறார்கள். முதலில் எட்டு வழிச்சாலையை எதிர்த்தார்கள். தற்போது ஆதரிக்கிறார்கள். காலத்தின் கட்டாயம் எனப் பேசுகிறார்கள்.
இன்றைக்கு நில எடுப்பு பணிகள்கூட தி.மு.க அரசால் செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நிலம் எடுக்கப்பட்டபோது சிறு சலசலப்புகூட எற்படவில்லை, புதிய விமான நிலைய விரிவாக்கம் வாழ்வாதாரத்தை எந்தளவு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.
மக்களை வாட்டிவதைக்கும் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, டீசல் பற்றாக்குறையால் பஸ்கள் நிறுத்தம் என தி.மு.க அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. இதையெல்லாம் அரசுக்கு நினைவூட்ட கடமையாற்றும் பணிகள் எடப்பாடியாருக்கு அதிகம் உள்ளன” என்றார்.
‘ஒற்றுமை என ட்விட்டரில் சசிகலா பதிவிட்டுள்ளாரே’ என்ற கேள்விக்கு, “இது காலம் கடந்த விவாதம்” என்றவர், “தீர்ப்புக்கு பிறகு தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்குவற்கு உத்வேகத்தோடும் உற்சாகத்தோடும் தொண்டர்கள் உழைக்க தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க ஒற்றுமையாக உள்ளது என நீதிமேன்றமே தீர்ப்பளித்துவிட்ட பிறகு அது குறித்து கருத்து சொல்லி விவாதிக்க ஒன்றும் இல்லை” என்றார்.